“இதயத்திற்கு இதமான உணவுகளை எடுத்துக் கொள்வோம்”;உலக இதய தின விழாவில் உணவு பாதுகாப்பு அலுவலர் பேச்சு..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.இதில் பேசிய உணவு பாதுகாப்பு அலுவலர் “இதயத்திற்கு இதமான உணவுகளை எடுத்துக் கொள்வோம்”என்று தனது உரையில் குறிப்பிட்டார். நெல்லை அரசு அருங்காட்சியகமும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி விலங்கியல் துறையும் இணைந்து நடத்திய உலக இதய தின நிகழ்ச்சிக்கு மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை தாங்கினார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் முன்னிலை வகித்தார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா “இதயம் காப்போம் “என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.ஆர். சங்கரலிங்கம் “இதயத்திற்கேற்ற உணவு முறைகள் “என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் “மாறி வரும் உலகச் சூழ்நிலை காரணமாக நமது உணவு முறைகளும் வெகுவாக மாறிவிட்டது. நமது பாரம்பரியமான உணவு முறைகளில் இருந்தும் நாம் விலகி விட்டோம். தரமான உணவு முறைகள் இல்லாத காரணங்களால் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இதய சம்பந்தமான நோய்களும், இறப்புகளும் அதிகமாகி விட்டது. எனவே இதயத்திற்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கலப்படமில்லாத உணவுகளை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். சமையல் எண்ணெய்களை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்துவதால் கேன்சர் நோய் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு உணவு வணிகர்களிடமிருந்து ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை பயோ டீசல் தயாரிக்கும் மறு சுழற்சிக்காக அரசாங்கமே விலை கொடுத்து வாங்குகிறது “எனக் குறிப்பிட்டார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் சித்தி ஜமீலா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள் முகைதீன்,பாத்திமா பர்ஜானா உட்பட விலங்கியல் துறையின் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..