Home செய்திகள்உலக செய்திகள் ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25, 1644).

ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25, 1644).

by mohan

ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் (Ole Christensen Romer) செப்டம்பர் 25, 1644ல் ஆர்ஹஸ், டென்மார்க்கில் வணிகராகவிருந்த கிறிஸ்டென் பெடர்சன்னுக்கும் அன்னா ஓலுஃப்சுதத்தர் இசுடார்மிற்கும் மகனாகப் பிறந்தார். கிறிஸ்டென் பெடெர்சன் தமதுப் பெயரைக் கொண்ட மற்றவர்களிடமிருந்து தம்மை பிரித்துக்காட்ட ரோமர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார். ரோமர் எனில் டேனிய தீவான ரோமாவைச் சேர்ந்தவர் என்ற பொருளாகும். 1662ல் ஓலி ரோமர் மெட்றிக் படிப்பை முடிக்கும்வரையிலான வாழ்க்கைப்பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஐசுலாந்து படிகத்தினால் (கால்சைட்டு) ஏற்படும் இரட்டை ஒளிவிலகலை ரோமர் கண்டறிந்ததை கோபனாவன் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டியாக இருந்த ராசுமசு பார்த்தோலின் 1668ல் பதிப்பித்தார். இதனையடுத்து பார்த்தோலின் டைக்கோ பிராவின் வானியல் பதிவுகளைக் கொண்டு கணிதத்தையும் வானியலையும் கற்க ரோமருக்கு உதவினார்.

ரோமருக்கு பிரெஞ்சு அரசின் வேலை கிடைத்தது. லூயி XIV மன்னர் இளவரசருக்கு ஆசிரியராக நியமித்தார். மேலும் ரோமர் வெர்சாய் அரண்மனையின் அழகான நீர்த்தாரைகளை வடிவமைப்பதிலும் பங்கேற்றார். 1681ல் ரோமர் டென்மார்க்கிற்கு திரும்பினார். கோபனாவன் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் தமது வழிகாட்டி பார்த்தோலினின் மகள், ஆன் மாரி பார்தோலினைத் திருமணம் செய்துகொண்டார். வானியல் பார்வையாளராக துடிப்பாக செயலாற்றினார். பல்கலைக்கழகத்தில் இருந்த ருண்டெடாம், வட்டக் கோபுரத்திலிருந்த ஆய்வகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் தமது கவனிப்புகளை தொடர்ந்தார். தமக்கான பொறிகளை தாமே வடிவமைத்து உருவாக்கிக்கொண்டார். ஆனால், அவரது குறிப்புகள் யாவும் 1728ஆம் ஆண்டின் கோபனாவன் தீவிபத்தில் அழிந்துவிட்டன. இருப்பினும் அவரது முன்னாள் உதவியாளரான பெடர் ஹொர்ரெபோ இவற்றை விவரித்து எழுதினார்.

அரசவையில் கணிதவியலாளராக இருந்ததால் மே 1, 1683ல் டென்மார்க்கில் முதன்முறையாக எடைகளுக்கும் அளவுகளுக்கும் தேசிய அமைப்பொன்றை நிறுவினார். துவக்கத்தில் ரைன் அடி என்ற அளவை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் 1698ல் மேலும் துல்லியமான தேசிய சீர்தரங்கள் கடைபிடிக்கப்பட்டன. வானியல் மாறிலிகளைக் கொண்டு அளவுகளுக்கான வரையறைகளை நிறுவ விரும்பினார். இது அவரது மறைவிற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. டேனிய மைலை வரையறுத்ததும் இவரே. 24,000 டேனிய அடிகள் ஒரு மைலாகும் (கிட்டத்தட்ட 7,532 மீ). 1700ல் ரோமர் டென்மார்க்கு, நோர்வேயில் கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்த மன்னரின் ஒப்புதலைப் பெற்றார். முன்னதாக இதனை செயல்படுத்த நூறாண்டுகளுக்கும் மேலாக டைக்கோ பிரா எடுத்த முயற்சிகள் வீணாகியிருந்தன. ரோமர் முதலில் இயற்றப்பட்ட வெப்பநிலை ஒப்பளவுகளில் ஒன்றை வடிவமைத்தவரும் ஆவார். 1708ல் இவரைச் சந்தித்த டேனியல் பாரன்ஃகைட் இவர் உருவாக்கியிருந்த ரோமர் வெப்பளவுமானியை மேம்படுத்தி தற்போது சில நாடுகளில் புழக்கத்தில் உள்ள பாரன்ஃகைட் வெப்ப ஒப்பளவை உருவாக்கினார்.

டென்மார்க்கின் பல நகரங்களிலும் பல கடற்வழி நடத்தல் பள்ளிகளை நிறுவினார். 1705ல் கோபனாவன் காவல்துறையின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் தனது முதல் செயற்பாடாக காவல்துறையை முழுவதுமாக கலைத்தார். காவல்துறையின் தன்னம்பிக்கை மிகவும் குன்றியிருந்ததாகக் கருதினார். கோபனாவனில் தெருவிளக்குகளை (எண்ணெய் விளக்குகள்) அறிமுகம் செய்தவரும் இவரே. பிச்சைக்காரர்கள், ஏழைகள், வேலையற்றோர், விலைமாதுக்களை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்தார். கோபனாவனில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகளை இயற்றினார். நகரின் நீர் வழங்கல், கழிவுநீர் அமைப்புக்களை சீரமைத்தார். நகரின் தீயணைப்புத் துறைக்கு புதிய கருவிகள் கிடைக்கச் செய்தார். நகரத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைமேடைகள் அமைக்க திட்டமிடுதலில் முக்கியப் பங்காற்றினார்.

நிலப்படவியலிலும் கடல்வழிகாட்டுதலிலும் நிலநிரைக்கோட்டை தீர்மானிப்பதில் செயல்முறைச் சிக்கல்கள் இருந்தன. இதற்கு தீர்வுகாண நிலத்திலிருந்து தள்ளி உள்ள கப்பலில் இருந்து நிலநிரைக்கோட்டை தீர்மானிக்கும் வழிமுறையொன்றை கண்டுபிடிப்பவருக்கு எசுப்பானியாவின் மூன்றாம் பிலிப் பரிசுகள் அறிவித்தார். இதன் எதிர்வினையாக 1616-17ல் கலீலியோ ஒரு கப்பலில் இருந்து நேரத்தையும் நிலநிரைக்கோட்டையும் அறிய வியாழக்கோளின் துணைக்கோள்களின் ஒளிமறைப்புக்களைப் பயன்படுத்தும் முறையை நிறுவினார். இருப்பினும் துல்லியமான நேர அட்டவணைகள் 18வது நூற்றாண்டு வரை கணிக்கப்படாததாலும் கப்பல்களிலிருந்து வியாழனின் துணைக்கோள்களை கவனிப்பதில் சிக்கல்கள் நிலவியதாலும் இதை நடைமுறைப்படுத்த இயலவில்லை. 1676ஆம் ஆண்டு ரோமர் விரிவுரைத்த கட்டுரையில் உள்ள படம் ரோமர் ஐஓ துணைக்கோளின் சுற்றுப்பாதைகளின் நேரங்களை புவி வியாழனை நோக்கி நகரும்போதும் (F – G) புவி வியாழனிலிருந்து வெளியே நகரும்போதும் (L – K) ஒப்பிட்டார்.

இருப்பினும் வியாழனின் துணைக்கோள்களை நேரம் தீர்மானிக்கப் பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது. 1671ல் பல மாதங்களாக யான் பிக்கார்டும் ரோமரும் வியாழனின் ஐஓ சந்திரனின் 140 கிரகணங்களை கவனித்து பதிந்தனர். அதே காலகட்டத்தில் பாரிசில் கியோவன்னி டொமெனிகோ காசினி என்ற பிரெஞ்சு அறிவியலரும் இந்த கிரகணங்களை பதிந்து வந்துள்ளார். இருவரது நேரங்களையும் ஒப்பிட்டு பாரிசுக்கும் ரோமர் பணிபுரிந்த யுரானியன்போர்க்குக்கும் இடையேயான நிலநிரைக்கோட்டு இடைவெளி கணக்கிடப்பட்டது. 1666க்கும் 1668க்கும் இடையே காசினி வியாழக்கோள்களின் சந்திரன்களைக் கவனித்து தமது அளவீடுகளில் பிழைகள் நேர்வதைக் கண்டறிந்தார். இது ஒளிக்கு குறிப்பிட்ட வேகம் இருப்பதாலேயே இருக்க வேண்டும் என எண்ணினார். 1672ல் ரோமர் காசினியிடம் உதவியாளராக இணைந்து இவற்றைக் கவனிப்பதைத் தொடர்ந்தார். காசினியின் அறிதல்களுடன் தன்னுடைய கவனிப்புக்களையும் இணைத்து ஆய்ந்தார். புவி வியாழனின் அருகாமையில் செல்லும்போது ஐஓ துணைக்கோளின் கிரணங்களுக்கு இடையேயான நேரங்கள் புவி வியாழனிடமிருந்து தள்ளி இருக்கும் போது ஏற்படுவதைவிட குறைவாக இருந்தது.

காசினி அறிவியல் அகாதமியில் ஆகத்து 22, 1676ல் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டார்: இந்த நேர வேறுபாடுகள் ஒளி கோள்களிலிருந்து புவியை அடைவதற்கு சிலத்துளி நேரமெடுப்பதால்தான் நிகழ்கின்றன. ஒளிக்கு கோள் பாதையின் பாதி விட்டத்தைக் கடப்பதற்கு பத்து முதல் பதினோரு நிமிடங்கள் எடுப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் தமது இந்த கருதுகோளை காசினி பின்னாளில் திரும்பப்பெற்றார். ஆனால் ரோமர் இதனை மேலும் ஆராய எடுத்துக்கொண்டார். பிக்கார்டும் தாமும் முன்னரே 1671-77 காலகட்டத்தில் நிகழ்த்திய கவனித்தல்களுடன் ஒப்பிட்டு பிரான்சிய அறிவியல் அகாதமிக்கு தமது முடிவுகளைத் தெரியப்படுத்தினார். ரோமரின் தரவுகளைக் கொண்டு பலரும் ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டனர். இவர்களில் முதலாமவராக கிறித்தியான் ஐகன்சு விளங்கினார். ரோமரின் தரவுகளையும் தமது கவனிப்புக்களையும் கொண்டு ஒளி வினாடிக்கு 16 2⁄3 புவியின் விட்டத் தொலைவு செல்வதாக கணக்கிட்டார். ஒளிக்கு அளவிடக்கூடிய வேகம் உள்ளது என்ற ரோமரின் கருதுகோள் 1727ல் ஜேம்ஸ் பிராட்லி தனது அளவீடுகள் மூலம் நிருபிக்கும்வரை அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

1809ல் ஐஓ துணைக்கோளின் கவனிப்புக்களைக் கொண்டு, இம்முறை நூறாண்டுகளுக்கும் மேலான துல்லிய அளவீடுகளைக் கொண்டு, யான் பாப்டிசுட்டு யோசஃப் டெலம்பர் சூரியனில் இருந்து ஒளி புவியை அடைய 8 நிமிடங்களும் 12 வினாடிகளும் ஆவதாகக் கணக்கிட்டார். இதனைக்கொண்டு ஒளியின் வேகம் வினாடிக்கு 300,000 கிலோமீட்டர்களை கணக்கிட்டார். தற்போது இது திருத்தப்பட்டு சூரியொளி புவியை அடைய 8 நிமி 19 வினாடிகளாவதாகவும் ஒளியின் வேகம் வினாடிக்கு 299,792.458 ஆகவும் கணகிடப்பட்டுள்ளது. ரோமர் பணிபுரிந்த பாரிசிலுள்ள வான்வெளி ஆய்வகத்தில் ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்தவராக ரோமருக்கு நினைவுப்பட்டயம் வைக்கப்பட்டுள்ளது. ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் செப்டம்பர் 19, 1710ல் தனது 65வது அகவையில் கோபன்ஹேகன், டென்மார்க்கில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!