நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை இலவச வீட்டு மனை கேட்டு முற்றுகையிட்ட பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் உள்ள எஸ். புதுக்கோட்டை, புதுசுக்லாபுரம், ராமசாமி புரம், கிருஷ்ணாபுரம், ஆகிய 4 கிராம பொதுமக்கள் நேற்று நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை இலவச வீட்டு மனை பட்டா கோரி முற்றுகையிட்டனர். அப்போது கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட  வழிவிடு  முருகன் கோவில் பின்புறத்தில் உள்ள அரசு புறம்போக்கு 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் பல ஆண்டுகளாக 4 கிராம பொதுமக்கள் நீண்ட நாட்களாக இலவச வீட்டுமனை கேட்டு சுமார் 450 குடும்பங்கள்  வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் பல்வேறு குடும்பங்கள் ஒரே வீட்டில் கூட்டுக் குடித்தனமாக வாழ்ந்து வருகிறோம். இதனால் பல்வேறு சூழ்நிலையில்  கிராம மக்களுடைய பல்வேறு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எனவே இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டுமனைப் பட்டா 4 கிராம மக்களுக்கும் அரசு புறம்போக்கு உள்ள இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரி முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த தாசில்தார் தனுஷ்கோடி பொதுமக்களிடம் உரிய மனுக்களை பெற்று முறையாக இடத்தை ஆய்வு செய்து நிச்சயமாக தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். இதனைத் தொடர்ந்து நான்கு கிராம மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர் இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..