Home செய்திகள் பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படம் : தடுப்பு குழு தலைவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படம் : தடுப்பு குழு தலைவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.

by mohan

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில்,” பனைமரம் தமிழகத்தின் மாநில மரம். பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படுவதோடு அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. பனங்கூழ், பனம்பழம், பனைவெல்லம், அதிலிருந்து தயாரிக்கப்படும் பனை கருப்பட்டி பனங்கற்கண்டு போன்றவை மருத்துவ குணம் உள்ளவையாக உள்ளன. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பனை சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன. உடன்குடி, வேம்பார் பகுதி பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் பலர் இதனை தவறாக பயன்படுத்தி சர்க்கரை பாகு, சர்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களைச் சேர்த்து பனை வெல்லம் பனங்கற்கண்டு போன்ற தோற்றத்தையும் வாசனையையும் ஏற்படுத்தி விற்பனை செய்கின்றனர். உடன்குடி பகுதியில் சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில் மாதம் 120 டன் சர்க்கரை அப்பகுதியில் விற்பனையாகிறது. இதன் மூலம் சர்க்கரை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமல்லாமல், இது போன்ற உணவு கலப்படத்திற்கும் பயன்படுத்தப்படுவது உறுதியாகிறது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்கவும் அதற்கு அனுமதி வழங்கவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் சர்க்கரைப்பாகு, சர்க்கரை ஆகியவற்றில் கலப்படம் செய்து பனை வெல்லம் பனங்கற்கண்டு போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்கும் போது கலப்படங்கள் தடுப்பதற்காக மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் மாநில அளவில் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் அடுத்த வழக்கு விசாரணையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!