இலங்கைக்கு கடத்த முயன்ற 420 கிலோ கஞ்சா சிக்கியது. ரொக்கம் 29.50 லட்சம் பறிமுதல்19 பேர் அதிரடி கைது.

மதுரை மாநகர தீவிர குற்ற தடுப்பு பிரிவினர் மற்றும் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, ஏ.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சிவசாமி மகன் செல்லத்துரை (39) என்பவரிடமிருந்து 34 கிலோ கஞ்சாவை கடந்த 21.01.2021-ம் தேதி கைப்பற்றி விசாரணை செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் நேரு நகர் 6-வது தெருவில் வசிக்கும் முகம்மது அலி மகன் நவாஸ்கான் என்பவரது வீட்டை ராமநாதபுரம் மாவட்ட தீவிர குற்ற தடுப்பு பிரிவினர், கேணிக்கரை மற்றும் ராமநாதபுரம் நகர் போலீசார் சோதனை நடத்தியதில், 8 மூடைகளில் தலா 2 கிலோ வீதம் 130 பாக்கெட்களில் 260 கிலோ கஞ்சா, கஞ்சா விற்பனை பணம் கைப்பற்றப்பட்டது. நவாஸ்கான் மகன் வாசிம்கான் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, நவாஸ்கான், அவரது மகன் வாசிம்கான் ஆகியோரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். இவர்களிருவரும் ஏற்கனவே பலமுறை கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பல்வேறு நபர் உதவியுடன் இலங்கைக்கு கடத்தியது தெரிய வந்தது. ஆந்திரா மாநிலம், அன்னாவரம் மலைத்தொடர், விசாகபட்டினம் பகுதிகளில் 2 கிலோ பொட்டலம் ரூ.3,000க்கு ஆந்திராவில் உள்ள வியாபாரிகள் கொள்முதல் செய்து, அதனை கார், கன்டெய்னர், சரக்கு வாகனங்கள் மூலம் மதுரை செல்லத்துரை, ஜெயா, அய்யம் பிள்ளை போன்ற மொத்த வியாபாரிகளுக்கு கிலோ ரூ.7,000 விலையில் வந்து சேருகிறது. அவர்களிடமிருந்து நவாஸ்கான், வாசிம்கான் ஆகியோர் 2 கிலோ எடையுள்ள ஒரு கஞ்சா பொட்டலம் ரூ.15,000க்கு வாங்கி, தங்கச்சிமடம், களிமண்குண்டு பகுதி படகோட்டிகள் மூலம் இலங்கை மாஸ்டர் (எ) ஜீவானந்தம், சுதர்சனம், ரகு, மதன் ஆகியோருக்கு ரூ.25,000 என்ற அளவில் மூலம் குறிப்பிடப்படும் நடுக்கடலில் வைத்து இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்தல் செய்து வந்தனர். இதற்கென பிரத்யே சங்கேத முறைகளை பயன்படுத்தி வந்தனர். உள்ளூர் வியாபாரிகள் 2 கிலோ பாக்கெட்டை வாங்கி சிறு, சிறு பொட்டலங்களாக 10 கிராம் வீதம் பிரிக்கப்பட்டு ரூ.50,000 வரை விற்பனை செய்தனர். நவாஸ்கான் மற்றும் வாசிம்கான் ஆகியோரிடம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தினேஷ், ராஜேஷ் ரமேஷ் ஆகிய உள்ளூர் கஞ்சா கடத்தல்காரர்கள் கஞ்சா வாங்கி, இலங்கையைச் கஞ்சா கடத்தல்காரர்களை பைபர் படகுகளில் நேரடியாக ராமேஸ்வரம், வடகாடு கடற்கரைக்கு வரவழைத்து கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான நவாஸ்கான், வாசிம்கான் படகோட்டிகள் மூலம் நடுக்கடலில் வைத்து கஞ்சா கடத்துவது மற்றும் நேரடியாக இலங்கை கடத்தல்காரர்களை ராமேஸ்வரம் வரவழைத்து கஞ்சா கடத்துவது போன்று இரண்டு வழிகளில் இலங்கைக்கு கஞ்சா கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நவாஸ்கான் அவரது மகன் வாசிம்கான், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நூர் முகமது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த கட்டி முகமது ஆகியோர் சென்னை, மண்ணடி, திருவல்லிக்கேணி பகுதிகளில் இருந்து ஐஸ் என்னும் மெத்தாம்பிட்டமைன், கேட்டமைன் போன்ற போதைப்பொருட்களை வாங்கி இலங்கைக்கு கடத்தியதும் தெரிய வந்தது.போதைப்பொருட்களை அனுப்பிய பணத்தை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வாசிம்கான் பெறுவதாக கிடைத்த தகவலின் படி மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார், செந்தில் குமார் ஆகியோரை மதுரை மாநகர், ராமநாதபுரம் மாவட்ட தீவிர குற்ற தடுப்பு பிரிவினர் பிடித்து விசாரணை செய்தனர். அதில் வாசிம்கான் ஏற்கனவே இலங்கைக்கு கஞ்சா அனுப்பிய பணத்தை ராஜ்குமார், செந்தில் குமாரிடம் இருந்து பெறாமல் அந்த பணம் அவர்களிடமே இருப்பதாக தெரிய வந்ததால், சம்பந்தப்பட்ட பணம் ரூ.25,00,000 கைப்பற்றப்பட்டது. வாசிம்கான் மற்றும் மற்ற எதிரிகளிடமிருந்து பணம் ரூ4,50,000 கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த 11.01.2021-ம் தேதியன்று இந்திய கடலோர காவல்படையினர் நடுக்கடலில் மிதந்து வந்த 139 கிலோ கஞ்சா கைப்பற்றி சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 12.01.2021, 13.01.2021 ஆகிய தேதிகளில் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் 39 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியதை தனுஷ்கோடி போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிவு செய்தனர். கஞ்சா தொடர்பாக, வாசிம்கானின் கூட்டாளியும், கஞ்சாவை கை மாற்றும் படகோட்டிகளான அந்தோணிசாமி, அந்தோணி தன்ராஜ் ஆகியோரை விசாரித்ததில், இலங்கைக்கு நடுக்கடலில் வைத்து கஞ்சா கடத்த முயன்றபோது இந்திய கடலோர காவல்படையினரை பார்த்ததும், கடலில் தூக்கி போட்டுவிட்டு தப்பியதாகவும் தெரிகிறது. வாசிம்கான் தகவலின் அடிப்படையில் வாசிம்கானின் கூட்டாளியான செந்தில்குமார் என்பவர் தனக்கு தெரிந்த தஞ்சாவூரைச் சேர்ந்த மணி, குமார், மதுரை மாவட்டம் திருவாதவூர், கீழத்தெரு கஞ்சா மொத்த வியாபாரியான அய்யம்பிள்ளை மகன் விஜயகுமார், அவரின் வாகன ஓட்டுனர் பிரசாந்த், செந்தில்குமார் மற்றும் காக்கணன் ஆகியோர் வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக தகவலின்பேரில், ராமநாதபுரம் நகர் போலீசார் அச்சுந்தன்வயல் சோதனைச்சாவடியில் வைத்து 160 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 4 பேரை கைது செய்த, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த ஒரு வார சோதனையில் கேணிக்கரை, ராமநாதபுரம் நகர் காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 19 எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து கஞ்சா 420 கிலோ, பணம் 29 லட்சத்து ஐம்பதாயிரம், நான்கு சக்கர வாகனம்-2, இரு சக்கர வாகனம்-1, படகு-3, செல்போன்-15, எடை இயந்திரம்-2, ஜிபிஎஸ் கருவி-1 1 ஆகியவை கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கஞ்சா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டு, வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இரண்டு வழக்குகளிலும் தீவிரமாக விசாரணை செய்து துப்பு துலக்கி பெரிய அளவிலான போதைப்பொருட்களை இலங்கை நாட்டிற்கு கடத்த முயன்ற ஒட்டுமொத்த கும்பலை கண்டறிந்து கைப்பற்றி சிறப்பாக பணிபுரிந்த தீவிர குற்றத்தடுப்பு போலீசார், ராமநாதபுரம் உட்கோட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டினார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..