புவிசார் குறியீடு கொண்ட மதுரை மல்லிகையின் ‘மணம்’ காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் – மதுரை மலர் சந்தை தலைவர் சோ ராமச்சந்திரன் வேண்டுகோள்

உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிகை பூவின் தரத்தையும் சிறப்பையும் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மதுரை மலர் சந்தையின் தலைவர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தென்மாவட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மலர் சந்தையாக மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தை விளங்குகிறது. இங்கு நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட டன் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன மேலும் இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக மதுரை மல்லிகை உலகப்புகழ் பெற்றதாகும். அதன் மணமும் சிறப்பும் காரணமாக உலகளாவிய சந்தை வாய்ப்பு மதுரை மல்லிகைக்கு உண்டு. இதுகுறித்து மதுரை மாவட்டம் மலர் சந்தையின் தலைவர் .சோ ராமச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில், மதுரை என்று சொன்னாலே மீனாட்சி அம்மன் கோவிலும் மதுரை மல்லிகையும்தான் எல்லோரும் நினைவிலும் வந்து செல்லும். தற்போது மதுரை மல்லிகைக்கான சீசன் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் தொடங்குகிறது. இன்றைய விலை நிலவரப்படி மதுரை மல்லிகை கிலோ ரூபாய் இரண்டாயிரத்திற்கும் விற்பனையாகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.

சீசன் தொடங்குகின்ற காரணத்தால் இனி வருகின்ற காலங்களில் மல்லிகை உற்பத்தி அதிகரிக்கும் இதன் காரணமாக வரத்தும் கூடுதலாக இருக்கும். மதுரை மல்லிகை விலை மிகக் கணிசமான அளவில் குறையத் தொடங்கும். நாளொன்றுக்கு 45 முதல் 50 டன் வரை மல்லிகை வரத்து இருந்து வந்த நிலையில் தற்போது அரை டன் அளவே சந்தைக்கு வருகிறது.மதுரை மல்லிகை உலகப்புகழ் பெற்று விளங்குவதற்கு காரணம் அதன் மணம் தான். ஆனால் தற்போது வெளிநாடுகளில் மதுரை மல்லிகையை வாங்குகின்ற மக்கள், மலரும் போது மஞ்சள் நிறத்தில் இருப்பதாக குறை சொல்கின்றனர். ஆகையால் தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் எடுத்து இதற்கான காரணத்தை ஆய்ந்தறிய வேண்டும். தற்போதைய கரோனா காலகட்டத்தில் மல்லிகை சாகுபடியில் இருந்து நிறைய விவசாயிகள் வெளியேறிவிட்டார்கள் ஆகையால் தமிழக அரசு இதற்கும் முயற்சி மேற்கொண்டு அந்த விவசாயிகளுக்கு உரிய வழிவகை செய்து கொடுக்க வேண்டும்.மதுரை மலர் சந்தை 24 மணிநேரமும் இயங்கிய காரணத்தால்தான் மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயர் இன்றைக்கும் உண்டு தற்போது நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இரவு பத்து மணியோடு மலர் விற்பனை முடிவடைந்து விடுகிறது. இதனையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் மலர்மாலைகள் தெய்வங்களுக்கு சாத்தப்படுவது இல்லை. இதனால் பாதிக்கப்படுவது மலர் விவசாயிகள்தான் ஆகையால் தமிழகத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கு மலர் மாலைகள் சார்த்துவததை அனுமதிக்க வேண்டும் என்றார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..