குதூகலத்துடன் தொடங்கிய மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று (14/01/2021) கோலாகல தொடங்கபட்டது. இந்நிகழ்வை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா துவக்கி வைத்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரையில் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. இதனைக் கண்டு ரசிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனி விமானத்தில் மதுரைக்கு வருகை தந்தார். அதே போல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உடன் பங்கேற்றார்.

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, தைத்திருநாளை முன்னிட்டு, அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள சிவகுருநாதசுவாமி கோவிலின் முன்பாக இன்று காலை 8 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இன்று (14/01/2021) நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் 430 வீரர்களும், 788 காளைகளும் பங்கேற்கின்றனர். வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் தகுதி பெற்றவர்களே தற்போது விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூட்டுறவு துறைஅமைச்சர், செல்லூர் ராஜூ மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகி யோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் வீரர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றனர்.

வீரர்களும், காளைகளும் சிறப்புடன் விளையாட ஏதுவாக சற்றேறக்குறைய 150 மீட்டர் நீளத்திற்கு ஒன்றரை அடி உயரத்தில் தென்னை நார்க் கழிவுகள் கொட்டப்பட்டு பரப்பப்பட்டுள்ளன. மேலும் பார்வையாளர்கள் மற்றும் விஜபி-க்கள் கண்டு களிக்கும் வண்ணம் வாடிவாசலின் முன்புறமாக இரண்டு பக்கமும் காலரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்புக் கருதி சவுக்குக் கம்புகள் மற்றும் இரும்பு வலைகளைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று வாடிவாசலின் பின்புறம், காளைகள் வரிசையாக வருவதற்கு ஏற்றவாறு ஏறக்குறைய 2 கி.மீ. தூரத்திற்கு சவுக்குக் கட்டைகளால் தடுக்கப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாடிவாசலிலிருந்து வெளியேறும் காளைகளை, வீரர்கள் திமிலை இறுகப் பற்றிக் கொண்டு காளை மூன்று சுற்றுகள் சுற்றும்வரை பிடித்திருக்க வேண்டும் அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இதில் ஏதேனும் ஒன்று நடந்தாலும் அந்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். வீரர்கள் யாரையும் தன்னருகே வரவிடாமல், மேற்கண்ட எதனையும் செய்ய அனுமதிக்காமல் செல்லும் காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

நாற்காலி, வேட்டி, துண்டு, குடம், அண்டா, தங்க நாணயம் உள்ளிட்டவை அந்தந்த சுற்றுகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளருக்கு வழங்கப்படும். 8 சுற்றுகளாய் நடைபெறும் இந்தப் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடித்த வீரர் அடுத்த சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்படுவார். இறுதியாக அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக தலா ஒரு பைக் பரிசாக வழங்கப்படுகிறது.

வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 16 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் என அங்கம் வகிக்கின்றனர்.

இது தவிர, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி சார்பாக இரண்டு சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் கூடுதலாக அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் துறை வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் காயமடையும் வீரர்களை மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ்கள் 10 எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். காயம்படும் காளைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்க கால்நடை மருத்துவர் குழுவும், இரண்டு கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உள்பட பேரிடர் மீட்புக்குழுவினர் 50 பேர் வாடிவாசல் அருகே இருப்பர்.

விஜபிக்கள் வருகையின் காரணமாய் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் அவனியாபுரம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கலெக்ஷன் பாய்ண்ட் என்று சொல்லப்படுகின்ற மாடுகள் வெளியேறும் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அசம்பாவிதம் நேராத வண்ணம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. அவனியாபுரத்தின் பல்வேறு பகுதியில் பெரிய திரைகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிற்பகல் 12 மணியளவில் வருகை தரவிருக்கின்றனர். இதற்காக ராகுல்காந்தி தனி விமானத்தில் டெல்லியிலிருந்து நேரடியாக மதுரைக்கு 12 மணியளவில் வருகை தருகிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை 2 மணி நேரம் கண்டு களிக்கிறார். பிறகு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

அவனியாபுரம் பொதுமக்களும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ஜல்லிக்கட்டுத் திருவிழா எட்டு சுற்றுகளாக நடைபெற்று மாலை 4 மணிக்கு நிறைவடையும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply