டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல், வேதியியல் அறிவியலாளர் அரால்டு கிளேட்டன் யுரே நினைவு தினம் இன்று (ஜனவரி 5, 1981).

அரால்டு கிளேட்டன் யுரே (Harold Clayton Urey) ஏப்ரல் 29, 1893ல் அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ள வாக்கர்ட்டன் எனும் ஊரில், மதகுருவான சாமுவேல் கிளேட்டன் யுரே மற்றும் கோரா இரெபெக்கா இரைநோல்க்கும் மகனாகப் பிறந்தார். அமெரிக்காவில் மாண்டானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கில்பெர்ட்டு இலூயிசு என்பாரின் நெறிகாட்டலில் வேதியியலில் வெப்பவியக்கவியல் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.

பெர்க்கிலியில் இயற்பியலாளர் இரேமண்டு டி. பிர்கெ அவர்களால் அறிவுத்தாக்கம் பெற்று பின்னர் கோப்பனாகனில் நீல்சு போருடன் சேர்ந்து அணுக்கட்டுமானம் பற்றி ஆய்வு செய்தார். அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் சான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் 1924 முதல் 1928 வரை வேதியியல் துணையாளராக (Associate in Chemistry) இருந்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஒரு ஆய்வுக்குழுவை உருவாக்கினார். பின்னர் ஆர்தர் உருவார்க்கு (Arthur Ruark) என்பாருடன் சேர்ந்து “அணுக்கள், குவாண்டாக்கள், மூலக்கூறுகள்” (Atoms, Quanta and Molecules) என்னும் தலைப்பில் ஒரு நூல் எழுதினார். இது ஆங்கிலத்தில் உருவான குவாண்டம் இயங்கியல் பற்றியும் அதன் பயன்பாடுகளும் பற்றியுமான முதல் நூல்களில் ஒன்று. யுரேயுக்கு அணுக்கருவியலில் ஆர்வம் ஏற்பட்டு அதில் ஆய்வு செய்ததின் விளைவாய் தியூட்டிரியம் கண்டுபிடிப்புக்கு வழிகோலியது.

அரால்டு கிளேட்டன் யுரே ஐதரசனின் ஓரிடத்தானாகிய டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக 1934ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றுப் புகழ் ஈட்டியவர். அணுகுண்டு உருவாக்கத்திற்கும், உயிரற்ற பொருள்களில் இருந்து உயிருக்குத் தேவையான கரிமப்பொருள்கள் உருவாகுவதைச் செய்து காட்டிய மில்லர்-யுரே செய்முறைக்காட்டுக்கும் புகழ் பெற்றவர். டியூட்டிரியம் (Deuterium) என்பது ஐதரசனின் ஓரிடத்தான்களும் (ஐசோடோப்புகளுள்) ஒன்றாகும். தியூட்டிரிய உட்கருவில் ஒரு நேர்மின்னியும் ஒரு நியூட்ரானும் உள்ளன. அணுக்கருவுள் இரண்டு துகள்கள் உள்ளதால் டியூட்டிரியம் எனப் பெயர் பெற்றது. கிரேக்க மொழியில் “டியூட்டெரோசு” (deuteros) என்றால் “இரண்டாவது” என்று பொருள். தியூட்டிரியத்தின் வேதியியல் குறியீடு 2H என்பதாகும். எனினும் D எனும் குறியீடும் இதைக்குறிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழில் இது நீரியம்-2 என்றும் அழைக்கப்படும். டியூட்டிரியம் இயற்கையில் கடலில் காணப்படுகின்றது. ஏறத்தாழ 6,420 ஐதரசன் அணுக்களில் ஒன்று டியூட்டிரியம் ஓரிடத்தானாக உள்ளது. அணுக்கள் நோக்கில் மில்லியன் பகுதிகளில் ~156.25 பகுதியாக (ppm) உள்ளது எனலாம். புவியில் 0.0156 விழுக்காடு இந்த டியூட்டிரியம் உள்ளது. (நிறை அளவில் 0.0312%). விண்மீன்களின் உள்நடுவே டியூட்டிரியம் உருவாவதை விட விரைவாக அழியும் ஆகையாலும் மற்ற முறைகளில் விளையும் அளவு மிகவும் குறைவானதாலும், இப்பொழுது இருக்கும் டியூட்டிரியத்தின் அளவு, பெரு வெடிப்பு என்னும் நிகழ்ச்சி ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றைய பொழுது உண்டானவை என்று கருதுகின்றார்கள்.

வால்வெள்ளி என்னும் விண்பொருள்களிலும் புவியில் காணப்படுவது போன்றே ஏறத்தாழ மில்லியன் பங்கில் 156 பங்கே கொண்டுள்ளதாக கணக்கிட்டுள்ளனர். இதனால் புவியின் கடலில் உள்ள நீர் கூட இப்படியான வால்வெள்ளி மோதலில் உருவானதாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். டியூட்டிரியம் இரு ஆக்சிசன் மூலக்கூறுகளுடன் சேர்ந்து கனநீர் உண்டாகிறது. கன நீர் அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. யுரே நோபல் பரிசைத் தவிர, 1943ல் பிராங்க்ளின் பதக்கத்தையும், 1962ல் ஜே. லாரன்ஸ் ஸ்மித் பதக்கத்தையும், 1966ல் ராயல் வானியல் சங்கத்தின் தங்கப் பதக்கத்தையும், 1973ல் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் பிரீஸ்ட்லி பதக்கத்தையும் வென்றார். 1964ல் அவர் தேசிய அறிவியல் பதக்கம் பெற்றார். 1947ல் ராயல் சொசைட்டியின் ஃபெலோ ஆனார். சிறுகோள்4716 யுரே (சந்திர தாக்க பள்ளம் யுரே) அவருடைய பெயரிடப்பட்டு உள்ளது.

யுரே தோட்டக்கலை மற்றும் கேட்லியா, சிம்பிடியம் மற்றும் பிற மல்லிகைகளை வளர்ப்பதில் மகிழ்ந்தார். டியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற அரால்டு கிளேட்டன் யுரே ஜனவரி 5, 1981ல் தனது 87வது அகவையில் கலிபோர்னியாவின் லா ஜொல்லாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இந்தியானாவின் டீகால்ப் கவுண்டியில் உள்ள ஃபேர்ஃபீல்ட் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..