ஸ்டாலின் தூண்டிவிட்ட போராட்டங்களை முறித்து தமிழக அரசு சாதனைதேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் பெருமிதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கால்நடை பராமரிப்பாளர்கள், வேளாண் பெருமக்கள், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், ஜமாத் நிர்வாகிகள், அதிமுக., நிர்வாகிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், மரக்கரி உற்பத்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் பின்னர், சாயல்குடி அருகே நரிப்பையூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: உண்மையான அர்ப்பணிப்புடன் உழைக்கும் தொண்டர்களால் அதிமுக., மீண்டும் ஆட்சிக்கு வரும். மற்ற கட்சிகளை பிளவுபடுத்த ஸ்டாலின் நினைத்தால் உங்கள் கட்சி தவிடு, பொடி ஆகிவிடும். அதிமுக.,வை பிளவுபடுத்த நினைக்கும் திமுக., தலைவர் ஸ்டாலின் எண்ணம் ஒரு போதும் பலிக்காது. இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உள்ள லட்சக்கணக்கானோர் தேர்தல் களத்தில் அதிமுக., வெற்றிக்கு உழைத்து வருகின்றனர். தீய சக்தி திமுக., வை வீழ்த்த இளைஞர்கள் சபதம் எடுத்துவிட்டனர். ஸ்டாலின் ஆசை, நிராசையாக போய் விடும். ஸ்டாலின் கணிப்பு தவறு. அன்றைய கால கட்டம் வேறு. இன்றைய கால கட்டம் வேறு. ஜெயலலிதா மறைவுக்கு பின் இந்த ஆட்சி ஒரு வாரம் நீடிக்காது. ஒரு மாதம் கூட தாங்காது என ஸ்டாலின் திட்டமிட்டு போட்ட குறுக்கு வழி பலிக்காமல் போய்விட்டது. மக்களுக்கான நலம் பயக்கும் பல்வேறு நலத் திட்டங்களால் 4 ஆண்டுகளாக இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசுக்கு எதிராக ஸ்டாலின் தூண்டி விட்ட போராட்டங்கள் கொஞ்சம், நஞ்சமல்ல. குடிநீர் பிரச்னை, புயல் காலங்களில் வாழ்வாதார பிரச்னை, கொரோனா பேரிடர் உள்ளிட்ட இடர்களை சமாளித்து மக்கள் விரும்பும் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறோம். மருத்துவ துறையில் வளர்ந்து விட்ட வல்லரசு நாடுகள் அமெரிக்கா, ஈரான் நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த இயலாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பேரிடரை கட்டுக்குள் கொண்டு வந்து தமிழகம் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பது தமிழக அரசின் சாதனை. அரசு டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி கட்டுக்குள் கொண்டு வந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. இது போன்ற பல்வேறு சாதனைகளை சகித்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் தமிழக அரசு, அதிமுக மீது தொடர்ந்து வீண் பழி சுமத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில், ஸ்டாலினுக்கு தகுந்த பாடம் புகட்ட தமிழக மக்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் நினைத்தால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத நிலை திமுக., விற்கு ஏற்படும். அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றி பல்வேறு தேசிய விருதுகளை பெற்று தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 19 லட்சம் பேருக்கு மறைமுக , நேர் முக வேலை வாய்ப்புகள் தரும் ரூ.3.05 லட்சம் கோடி வெளி நாட்டு முதலீடு ஈர்த்துள்ளோம். 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச மடி கணினி வழங்கியுள்ளோம். அடுத்த நான்காண்டுகளில் பசுமையான மாவட்டமாக ராமநாதபுரம் திகழ ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் தொடங்கவுள்ளோம். ஜெயலலிதா மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒப்பற்ற தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசி பெற்ற ஏழை மக்களுக்கான அரசு இது. மக்கள் எண்ணங்களை பிரபலிக்கும் அரசு இது. பொங்கல் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட அரிசி அட்டை ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.2,500 உடன் பொங்கல் பொருட்கள் ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழங்க உள்ளோம். அதிமுக., வின் எஃகு கோட்டை என மீண்டும் நிரூபிக்க ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்து அதிமுக ஆட்சிக்கு துணை நில்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார். தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), என்.சதன் பிரபாகர் (பரமக்குடி), சிறுபான்மை பிரிவு செயலர் அ.அன்வர் ராஜா, முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ், மாவட்ட செயலர் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி இணை செயலர் கீர்த்திகா முனியசாமி, அதிமுக., ஒன்றிய செயலர்கள் அந்தோணி ராஜ் (சாயல்குடி), என்.கே.முனியசாமி பாண்டியன் (கடலாடி), ஆர்.தர்மர் (முதுகுளத்தூர்), எஸ்.பி.காளிமுத்து(கமுதி), ஊராட்சி தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கே.சி. ஆனி முத்து, எம்.சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply