அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை வென்ற சிறந்த உலகக்கணித மேதை, பத்ம பூசன் எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 2, 1940).

சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் (Sathamangalam Ranga Iyengar Srinivasa Varadhan) ஜனவரி 2, 1940ல் சென்னையில் பிறந்தார். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவருடைய தந்தையார் அரங்க ஐயங்கார் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். 1959ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுமானி (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில், புகழ் பெற்ற புள்ளி இயலர் சி.ஆர்.ராவின் தலைமையின் கீழ் ஆய்வு செய்து 1963ல் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில் 1963லிருந்து 1966 வரையில் பணியாற்றினார். 1966ல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். 1968ல் இணைப்பேராசிரியரானார். நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார்.

1972ல் முழுப்பேராசிரியராக பணியேற்றம்பெற்று, 1980லிருந்து 1984 வரையும் மறுபடியும் 1992லிருந்து 1994 வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார். அவர் மனைவி வசுந்தரா வரதன் நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். வருகைப் பேராளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (1976-77), வருகையாளர் பதவி, மிட்டாகு-இலெஃப்ளர் கழகம் (Mittag-Leffler Institute) (1972), அமெரிக்க கணிதக்கழகத்தின் பிர்க்காஃப் பரிசு (1994), மார்கரரெட்டு-எர்மன் சோக்கோல் விருது, நியூயார்க்குப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் துறை (1995), மேரி கியூரீ பல்கலைக்கழகம், பாரிஸ், இன் பெருமைப்பட்டம் (2003), கொல்கத்தா இந்தியன் புள்ளியியல் கழகத்தின் பெருமைப்பட்டம் (2004), அமெரிக்கத் தேசிய அறிவியல் பதக்கம் (2010), இன்ஃபோசிசுப் பரிசு (2013), ஏபெல் பரிசு போன்ற பரிசுகளை பெற்றுள்ளார்.

நார்வே தேசத்து அறிவியல் கழகம் 2003லிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த ஏபெல் என்பவரின் நினைவில் ஏற்படுத்தப்பட்ட ஏபெல் பரிசை வழங்கி வருகின்றனர். இப்பரிசின் மதிப்பு இன்று $875,000 அமெரிக்க டாலர்கள். 2007ன் ஏபெல் பரிசு ஸ்ரீனிவாசவரதன் அவருக்குக் ‘நிகழ்தகவுக்கோட்பாட்டிற்கு அவர் செய்த அடித்தளப்பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக ‘பெரிய விலக்கங்கள் கோட்பாடு’ (Theory of Large Deviations) என்ற படைப்பிற்காகவும் கொடுக்கப்பட்ட பரிசு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றார். அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை 2010 ஆம் ஆண்டு பராக்கு ஒபாமா இவருக்கு அளித்தார். 2013 ஆண்டுக்கான இன்ஃபோசிசு பரிசையும் வென்றார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image