
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகள் குண்டும் குழியுமாக படு மோசமான நிலையில் உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் காலை முதல் தொடர் மழை காரணமாக பள்ளங்களில் மழைநீர் தேங்கி தெப்பம் போல் காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இந்த நிலையில் இன்று மாலை ஐந்து ஐந்து முப்பது மணி அளவில் தள்ளுவண்டியில் கடலை சோளம் மற்றும் சுண்டல் உள்ளிட்ட உணவு பொருள் விற்பனை செய்யும் வியாபாரி நேரு நகரில் இருந்து வியாபாரத்திற்காக தள்ளுவண்டியில் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ஓரமாக சென்று விடலாம் என்று நினைத்து தண்ணீருக்குள் அருகே சென்றபோது பள்ளம் இருப்பதை அறியாமல் அவரது தள்ளுவண்டி வாகனம் செல்லவே நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்கள் அனைத்தும் மழைநீர் பள்ளத்தில் விழுந்து வீணானது. பின் அந்த வியாபாரி கண்ணீர் விட்டு அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. நான் இதை நம்பித்தான் பிழைப்பு நடத்தி வருகிறேன் எனவும் எனக்கு ஒரு நாள் வருமானம் 300 ரூபாய் மட்டுமே .இப்பொழுது முதலும் மொத்தமாக போய் விட்டது எனவும் கண்ணீர் விட்டு அழுதார் .இதேபோன்று இருசக்கர வாகனத்தில் சென்ற பலரும் பள்ளத்தில் விழுந்து ஆஸ்பத்திரிக்கு சென்று பிளாஸ்திரி போகும் நிலை ஏற்பட்டுள்ளது .. மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக ..மழை நீர் தேங்கி உள்ள சாலைகளை பழுதுபார்த்து பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர். பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்