Home செய்திகள்உலக செய்திகள் வெப்பநிலையை அளக்க உதவும் செல்சியஸ் அளவுகோலை நிறுவிய சுவீடிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 27, 1701).

வெப்பநிலையை அளக்க உதவும் செல்சியஸ் அளவுகோலை நிறுவிய சுவீடிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 27, 1701).

by mohan

ஆன்டர்ஸ் செல்சியஸ் (Anders Celsius) நவம்பர் 27, 1701ல் சுவீடன் நாட்டில் உப்சாலாவில் பிறந்தார். அவர்களது குடும்பத் தோட்ட வளாகம் ஓகென் எனப்படும் தோமாவில் இருந்தது. செல்சியஸ் என்ற இவரது பெயர் செல்சஸ் (celsus) என்ற குடும்பத் தோட்ட வளாகப் பெயரின் இலத்தீன வடிவமாகும். இவரது ஒரு தாத்தா மேக்னஸ் செல்சியஸ் ஒரு கணிதவியலாளராவார். மற்றொரு தாத்தாவான ஆண்டெர்ஸ் போல் ஒரு வானியலாளராவார். எனவே இவர் வாழ்க்கைப்பணியாக அறிவியலைத் தேர்ந்தெடுத்தார். இளமையில் இருந்தே இவர் கணிதத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். இவர் அவரது தந்தை வானியல் பேராசிரியராக இருந்த உப்சாலா பல்கலைக்கழகத்தில் படித்தார். 1730ஆம் ஆண்டில் தன் 30ஆம் அகவையில் உப்சலா பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

1730ஆம் ஆண்டில், செல்சியஸ் புவியில் இருந்து சூரியனுக்குள்ள தொலைவை அளப்பதற்கான புதியமுறை எனும் ஆய்வுரையை வெளியிட்டார். இவர் புவிமுனைச் சுடர்வு நிகழ்வுகளையும் ஃஇயார்டெர் என்பவருடன் இணைந்து ஆய்வு செய்தார். வடமுனைச் சுடர்வுக்கும் புவிக் காந்தப் புல மாற்றங்களுக்கும் உள்ள உறவை முதலில் முன்மொழிந்தவர். வலிமைமிக்க சுடர்வுச் செயல்பாட்டின்போது காந்த ஊசிகள் பேரளவில் விலக்கம் உறுவதைக் கண்டார். நியூரம்பர்கில் 1733ல் வடமுனைச் சுடர்வு பற்றி 1716-1732 கால அளவில் தானும் பிறரும் பதிவு செய்த 316 நோக்கீடுகளைத் திரட்டித் தொகுத்து வெளியிட்டார். செல்சியஸ் 1730களில் தொடக்கத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்சு என பல்வேறு ஐரோப்பியாவில் உள்ள மாபெரும் வான்காணகங்களையெல்லாம் சுற்றிப் பார்த்துள்ளார்.

பாரீசில் வரலாற்றுப் புகழ்பெற்ற இலெபொனியாவில் கிடைவரையின் வில்லை அளக்கும் வழிமுறையை முன்மொழிந்துள்ளார். 1736ல் இதற்காக ஃபிரான்சு அறிவியல் கல்விக்கழகத்தால் ஃபிரெஞ்சு கணிதவியலாளர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கிடைவரை அளவீட்டுத் தேட்டத் திட்டத்தில் பங்கேற்றார். இந்த திட்டத்தின் நோக்கம் புவிமுனையில் ஒரு பாகை கிடைவரைத் தொலைவையும் பிறகு இன்றைய ஈக்வடாரில் உள்ள பெருவில் அதாவது புவி நடுவரையில் ஒரு பாகை கிடைவரைத் தொலைவையும் அளந்து ஒப்பிடுவதாகும். இத்தேட்டம் ஐசக் நியூட்டன் நம்பியதைப் போல, புவி தன்முனைகளில் தட்டையாக உள்ள நீள்வட்ட வடிவத்தில் உள்ளது என்பதை நிறுவியது.

1738ல் புவியின் வடிவத்தைத் தீர்மானிப்பதற்கான நோக்கீடுகள் என்ற நூலை வெளியிட்டார். இலாப்லாந்து புவித்தேட்டத்தில் செல்சியஸ் கலந்துக் கொண்டது சுவீடனில் அவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்த்து.சுவீடன் அரசாலும் ஒருசாலை ஆய்வாளர்களாலும் பெரிதும் மதிக்கப்படலானார். இதைப் பயன்படுத்தித் தன் செல்வாக்கினால் புதிய வான்காணகத்தை உப்சாலாவில் உருவாக்குவதற்கான பெரும்பொருளைத் திரட்டினார். இவர் உப்சாலாவில் உப்சாலா வானியல் நோக்கீட்டகத்தை வெற்றியுடன் நிறுவினார். அந்த வான்காணகத்தில் தன் ஐரோப்பியப் பயணத்தில் அரும்பாடுபட்டுத் திரட்டிய புத்தம்புது தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட வான்நோக்கீட்டுக் கருவிகளை அமைத்தார்.

வானியலில் செல்சியஸ் சில விண்மீன்களின் பொலிவை அளக்க வண்ணக் கண்ணாடித் தட்டுகளைப் பயன்படுத்தி தொடர்ந்து வான்நோக்கீடுகளைச் செய்யலானார். இதுதான் முதன்முதலான கருவிவழிப் பொலிவு அளவீடுகளாகும்.அதுவரை விண்மீன் பொலிவு வெற்றுக்கண்ணால்தான் மதிப்பிடப்பட்டு வந்தது. இவர் ஒளிமறைப்புகல், பல்வேறு வான்பொருட்கள் தொடர்பான நொக்கீடுகளைச் செய்தார். ஏறத்தாழ 300 விண்மீன்களின் பொலிவுப் பருமைகளைத் தன் ஓளியளவு முறைப்படி அளந்து வெளியிட்டார். அறிவியலாக பன்னாட்டு வெப்பநிலை அளவை வரையறுக்க, பல செய்முறைகளைச் செய்து செல்சியஸ் அளவுகோலை முதன்முதலில் உருவாக்கியவர் இவர்தான். இவர் “இரு நிலையான பாகைகள் பற்றிய வெப்பநிலை” என்ற தன் சுவீடிய ஆய்வுரையில், உறைநிலை பற்றிய ஆய்வு உறைநிலை கிடைவரையைப் பொறுத்தும் (வளிமண்டல அழுத்த்த்தைப் பொறுத்தும்) மாறுவதில்லை என்று அறிவிக்கிறார். ஆனால் தண்ணீரின் கொதிநிலை வளிமண்டல அழுத்தத்தைப் பொறுத்து மாறுவதைக் கூறுகிறர்.

அவரது அளவீடுகள் மிகத் துல்லியமாக உள்ளன. செந்தர அழுத்த்த்தில் இருந்து வளிமண்டல அழுத்த அளவு மாறும்போதும் கொதிநிலையைக் கண்டறியும் விதியையும் தந்துள்ளார். 1710லேயே நிறுவப்பட்ட மிகப்பழைய உப்சாலாவில் இருந்த அரசு அறிவியல் கழகத்துக்கு ஓர் ஆய்வுரைவழியாக செல்சியஸ் வெப்பநிலை அளவுகோலை 1742ல் அறிவித்தார். இவரது வெப்பநிலையளவி உறைநிலையை 100 பாகையாகவும் கொதிநிலையை 0 பாகையாகவும் கொண்டிருந்தது. செல்சியசின் இறப்பிற்குப் பிறகு, 1745ல் கார்ள் இலின்னேயசு நடைமுறையில் அளத்தலை எளிதாக்க இதை தலைக்கீழாக மாற்றியமைத்தார். செல்சியஸ் முதலில் தன் வெப்பநிலை அளவுகோலை நூறு படிகள் எனப் பொருள்படும் இலத்தீனச் சொல்லாலேயே அழைத்தார். பல ஆண்டுகட்கு இது சுவீடிய வெப்பநிலையளவி என்றே வழங்கப்பட்டது. இவரது மாணவரான மார்ட்டின் சுற்றோமர் (Martin Stromer) எட்டாண்டுகள் கழித்து இம்முறையைப் பின்பற்றும் வெப்பநிலைமானியை உருவாக்கினார். இது ஐரோப்பாவில் செல்சியஸ் என்ற பெயரிலும் இங்கிலாந்தில் செண்ட்டிகிரேடு என்ற பெயரிலும் முன்பு வழங்கப்பட்டது. இதனையொட்டியே இந்த அனைத்துலக அலகுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

செல்சியஸ் 1725ல் உப்சாலா அரசு அறிவியல் கழகத்தின் செயலாளரானார். அவர் 1744 வரை அப்பதவியில் இருந்தார். இலின்னேயசும் வேறு ஐவரும் 1739ல் சுட்டாக்ஃஓல்மில் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழக்த்தை நிறுவ முயன்றபோது அதற்குத் தன் முழு ஆதரவையும் தந்தார். இவர் அதன் முதல் கூட்டத்தில் அதன் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் இந்தப் புதிய கல்விக்கழகத்துக்குப் பெயர் சூட்டியதே செல்சியஸ் தான். செல்சியஸ் அளவுகோலை நிறுவிய ஆன்டர்ஸ் செல்சியஸ் ஏப்ரல் 25, 1744ல் தனது 42வது அகவையில் உப்சாலா, சுவீடனில் எலும்புருக்கி நொயால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!