கருப்பாநதி அடவிநயினார் அணைகளில் தண்ணீர் திறப்பு;விவசாயிகள் மகிழ்ச்சி…

கருப்பாநதி அடவிநயினார் அணைகளில் தண்ணீர் திறப்பு;விவசாயிகள் மகிழ்ச்சி..தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 72.18 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை இந்த அணையின் நீர்மட்டம் 68.4 அடியாக உள்ள நிலையில், இந்த அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.கால்வாய் மூலம் 9514.7 ஏக்கர் பாசனம் நிலங்களுக்கு 125 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 25 கன அடி வீதம், 180.37 மி.க .அடி மிகாமல் பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் பெருங்கால், பாப்பான்கால் , சீவலன்கால் விவசாயிகள் நீர்பாசனம் பெறுவார்கள் கடையநல்லூர், வீகேபுதூர் , சங்கரன்கோவில் ஆகிய தாலுகா விவசாயிகள் நீர்பாசனம் பெறுவார்கள்.

கருப்பாநதி அணை திறப்பு நிகழ்ச்சியில்  மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் .எம்.ராஜலெட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் குட்டியாப்பா என்ற கிருஷ்ணமுரளி, செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர், மணிகண்டராஜன், உதவிப் பொறியாளர் சரவணன், கடையநல்லூர் நகர அதிமுக செயலாளர் முருகன் மற்றும் விவசாய சங்கத்தினர் மற்றும் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.மேலும், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரையில் உள்ள அடவிநயினார் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த அணை மூலமாக மேட்டுக் கால்வாய், கரிசல் கால்வாய், பண்பொழி கால்வாய், வல்லாக்குளம் கால்வாய், சாம்பவர் வடகரை கால்வாய் மற்றும் இரட்டை குளம் கால்வாய்கள் மூலமாக செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், வீ.கே புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை, பண்பொழி , குத்துக்கல் வலசை, இலத்தூர், அச்சன்புதூர், நெடுவயல், கொடிக்குறிச்சி, நயினாரகரம், கிளாங்காடு,ஆய்க்குடி, கம்பளி, சாம்பவர் வடகரை, சுரண்டை கிராமங்களில் 7643.15 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் 125 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க மாநிலச் செயலர் ஜாகிர் உசேன், அடவிநயினார் நீர்த்தேக்க நீரை பயன்படுத்துவோர் சங்க முன்னாள் தலைவர் செல்லத்துரை, விவசாய சங்க பிரதிநிதிகள் ராசு, சோழன், முருகையா மற்றும் வடகரை, மேக்கரை, இலத்தூர், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..