தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் புதிய இணையதளம்; மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வடிவமைப்பு..

தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் புதிய இணையதளம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.தென்காசி மாவட்ட நிர்வாகம் அனைத்து பொதுமக்களுக்கும் தேவையான முக்கியமான பல்வேறு தகவல்களை இணையதளம் வழியாக வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளது. https://tenkasi.nic.inஎன்ற இணைய முகவரியில் தேசிய தகவலியல் மையம் வடிவமைத்த புதிய இணையதளத்தினை, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டா் கீ.சு.சமீரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி. எம்.ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்.இதற்கான தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் கூறும் போது இந்த புதிய இணையதளமானது அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுவானவடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இணையதள வசதி மூலம் மாவட்ட நிர்வாகம் சம்பந்தபட்ட தகவல்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பெற்றுக்கொள்ளலாம்.

இதனை சாதாரண கணினியில் மட்டுமின்றி பொதுமக்களின் கையிலுள்ள மடிக்கணினி,கைபேசி, ஐபேட்,இ-டேப்லட் போன்ற அனைத்து இணைய இணைப்பு வசதி கொண்ட மின்னணு சாதனங்களிலும் எளிதில் பார்க்கும் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகளும் எளிதில் இந்த இணையதளத்தினை கையாள்வதற்கும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை போன்ற கண்குறைபாடு கொண்டவர்கள், இணையதள பக்கங்களிலுள்ள தகவல்களை தங்களுக்கு வேண்டிய அளவில் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ மாற்றிக்கொள்ளலாம். சாதரண அளவிலிருந்து நான்கு முறை பெரிய அளவிலும் அல்லது நான்கு முறை சிறிய அளவிலும் மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது.கணினி திரையிலுள்ள நிறங்களை சரியாக கண்டறிய திணறும் பார்வை நிறக்குறைபாடு உடையவர்கள், முற்றிலும் மாறுபட்ட நிறங்களில் இணையதள பக்கத்தை மாற்றி வைத்துக் கொண்டு அதிலுள்ள விபரங்களை எளிதில் பார்த்து தெரிந்து கொள்ளும் வசதியும் இந்த இணையதளத்திலுள்ளது.

பார்வை குறைபாடு உள்ளவர்கள் அவர்களுடைய கணினியில் அமைத்துள்ள ஒலிக்கும் மென்பொருள் மூலம் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் இணையதள பக்கங்களை நேரிடையாக கேட்டுக் கொள்ளும் வசதியும் இந்த இணையதளத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.மேலும் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள District Collecor Tenkasi என்ற முகநூல் பக்கத்திற்கும்,ட்விட்டா் பக்கத்திற்கும், இந்த இணையதளம் மூலமாகவே எளிதில் செல்லும் வசதி,ஒருவர் தான் விரும்பும் ஒரு பக்கத்திலுள்ள இணையதள விபரங்களை முகநூல், கட்செவி போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக மற்றொருவருக்கு எளிதில் பகிர்ந்து கொள்ளும் வசதி, அதை எளிதில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளும் வசதி போன்ற பல புதிய வசதிகள் இந்த புதிய இணையதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து முக்கிய துறைகளைப் பற்றிய பொதுமக்களுக்குத் தேவையான விபரங்கள் அனைத்தும் இந்த புதிய இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடப்படும். மேலும் வரும் காலத்தில் தென்காசி மாவட்ட பொதுமக்களையும் மாவட்ட நிர்வாகத்தையும் இணைக்கும் ஒரு பாலாமாகவும் இது செயல்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சமீரன் கூறினார்.புதிய இணையதள துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), அ.மனோகரன் (வாசுதேவநல்லூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட தேசிய தகவலியல் மையத்தை சேர்ந்த முதுநிலை தொழில்நுட்ப இயக்குநர் எஸ்.தேவராஜன், தொழில்நுட்ப இயக்குநர் பி.ஆறுமுகநயினார் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..