திண்மங்களின் (Solids) காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இலூயீ நீல் பிறந்த தினம் இன்று (நவம்பர் 22, 1904).

இலூயீ யூழ்சீன் பெலி நீல் (Louis Eugene Felix Neel) நவம்பர் 22, 1904ல் இலியான், பிரான்சில் பிறந்தார். இலியான் நகரில் உள்ள பார்க்கு உயர்நிலைப் பள்ளியில் (Lycee du Parc) படித்தார். பின்னர் பாரிசில் உள்ள ஈக்கோல் நோர்மால் சுப்பீரியர் (Ecole Normale Supérieure) என்னும் உயர் கல்விக்கழகத்தில் பயின்றார். அதன் பின்னர் இசிற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் (University of Strasbourg) அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1970ல் திண்மங்களின் காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்றார். திண்மநிலை காந்தப் பண்புகளின் ஆராய்ச்சியால் கணினி நினைவக உறுப்புகளில் மிகப்பல முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. ஏறத்தாழ 1930ல் இவர் முற்றிலும் புதிய ஒருவகையான காந்தப்பண்பு இருக்கக்கூடும் என்று கூறினார். இது மறுதலை இரும்பியக் காந்தம் (antiferromagnetism) என்று அழைக்கப்படுகின்றது. இரும்புக் காந்தம்போல், ஆனால் ஒரு பொருளின் உள்ளே உள்ள காந்தத்தன்மையுடைய அணுக்கூறுகள் ஒரே திசையில் காந்தப் புலம் கொள்ளாமல் எதிரெதிர் திசையில் நின்று ஏறத்தாழ காந்தத்தன்மை இல்லாதது போல் இருக்கும். ஆனால் தாழ்ந்த வெப்பநிலையில் ஓரளவுக்குக் காந்தத்தன்மை கொண்டிருக்கும்.

வெப்பநிலை உயர்ந்தால் இந்தக் காந்தத் தன்மையை இழந்துவிடும். இதே போன்ற, ஆனால் சிறிதளவு எதிரெதிர் காந்தச் சாய்வுகள் கொண்ட தன்மையுடைய சிறுமுரண் இரும்பியக் காந்தப் பண்பையும் இவர் 1947 இல் கண்டுபிடித்தார். இந்த சிறுமுரண் இரும்பியக் காந்தத்தன்மையும் நீல் வெப்பநிலை என்னும் வெப்பநிலை எய்தியவுடன் மறைந்துவிடும். இலூயிசு நீல், பாறைகளில் காணப்படும் மென்மையான காந்தத் தன்மைக்கும் தக்க விளக்கம் தந்தார். இவருடைய ஆய்வின் பயனாக நில உருண்டையின் காந்தப்புல வரலாற்றை அறிய முடிகின்றது. சிறுமுரண் இரும்பியக் காந்தவியல் (Ferrimagnetism) என்பது சில திண்மப் பொருள்களில் காணப்படும் ஒருவகையான மென்மையான நிலைக்காந்தவியல். இரும்பில் உள்ள இரும்பணுக்களின் காந்தக்கூறுகள் ஒரே திசையில் நிற்கும். ஆனால் சிறுமுரண் இரும்பியக் காந்தம் என்னும் பொருளில் உள்ள அணுக்களின் காந்தப்புலத்தின் திசை எதிர் எதிராக நிற்கக்கூடியன.

சில அணுக்களின் காந்தப்புலம் ஒரு திசையிலும் வேறு சில அணுக்களின் காந்தப்புலம் எதிர் திசையிலும் தற்செயலாய் நிற்கும், என்றாலும் ஒரு குறிப்பிட்ட கியூரி வெப்பநிலைக்குக் கீழே, இந்த எதிரெதிர் நிற்கும் காந்தக்கூறுகள் ஓரளவுக்கு ஒரே திசையில் காந்தத்தன்மை காட்டக்கூடியவை. மேக்னட்டைடு (magnetite) , இரும்பு ஆக்சைடு ( Fe3O4) போன்றவை இவ்வகையான சிறுமுரண் இரும்பியக் காந்த வகையை சேர்ந்தவை.

சிறுமுரண் இரும்பியக் காந்தமும், இரும்புக்காந்தம் போலவே கியூரி வெப்பநிலைக்குக் கீழே தானாகவே காந்த ஒழுங்கு பெற்று இருக்கும், ஆனால் இதில் எதிர் திசையில் நிற்கும் காந்தக்கூறுகளும் உண்டு. கியூரி வெப்பநிலைக்குக் கீழே இப்பொருளில் உள்ள படிகக்கூறுகளின் காந்தத் திருப்பம் (magnetic moment) சரியாக எதிர் எதிராக நின்று ஈடாக நிற்கும் ஒரு நிலை (magnetization compensation point) உண்டு. இது தவிர கோண உந்தம் ஈடுசெய் புள்ளி என்றும் ஒரு நிலை உண்டு. இப்படி உள்ள நிலையால்தான் விரைவாக காந்தத் திசைகளை மாற்ற இயலுகின்றது. திண்மங்களின் காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இலூயீ யூழ்சீன் பெலி நீல் நவம்பர் 17, 2000ல் தனது 95வது அகவையில் பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply