குஷ்புவால் வாக்கு வங்கி உயராது ; அருள் அன்பரசு பேட்டி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியது. மாவட்டத் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மார்க்கெட் குமார், செந்தமிழ் அரசு, காமராஜ், மோகன், ஆசை முஷீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும், சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான அருள் அன்பரசு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.பின்னர், செய்தியாளர்களிடம் மேலிடப் பொறுப்பாளர் அருள் அன்பரசு பேசும்போது, “திமுகவில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு துரத்தியடிக்கப்பட்டவர்தான் நடிகை குஷ்பு. பின்னர், காங்கிரஸ் கட்சியில் சேர சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்தித்து அவர் அளித்த கோரிக்கைகளின் அடிப்படையில் கட்சியில் சேர்க்கப்பட்டார்.காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தபோது அவரால் கட்சிக்கு எந்தப் பலனும் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி மூலமும், பல்வேறு நபர்கள் மூலமும் கட்சி சார்ந்தவர்களிடம் பெரிய அளவில் நிதி பெற்று திரைப்படங்களை எடுத்துள்ளார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று குஷ்பு கேட்டார். இதற்கு ராகுல் காந்தி மறுப்புத் தெரிவித்தார்.தற்போது, பொருளாதார நெருக்கடியில் உள்ள குஷ்பு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வங்கி நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததால் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
மனு தர்மம் இந்து தர்மத்துக்கு எதிரானது என்றும் பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் 40 நிமிடங்கள் திருமாவளவன் பேசிய வீடியோ காட்சிகளைப் பாஜகவினர் தங்களுக்கு வசதியாக வெட்டி பெண்களுக்கு எதிராகப் பேசிவிட்டதாக வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர். குஷ்புவால் பாஜகவுக்கு எந்த வாக்கு வங்கியும் கூடாது” என்று தெரிவித்தார்.