கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

தி.மலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.தனியாா் சா்க்கரை ஆலை வழங்க வேண்டிய ரூ.26 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி, தி மலையில் கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.தி.மலை மாவட்டம், போளூா் அருகே தனியாா் சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.26 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ள தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். பல மாதங்களாகியும் நிலுவைத் தொகையை சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்கவில்லை.எனவே, நிலுவைத் தொகையை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் திரண்டனா்.பின்னா், நிலுவைத் தொகை ரூ.26 கோடி கிடைக்கும் வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்து கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பாலமுருகன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.அங்கேயே மதிய உணவை சமைத்துச் சாப்பிட்டனா். தகவலறிந்த போலீஸாா் வந்து கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சுப்பிரமணி, பலராமன், வெங்கடேசன், பி.செல்வம் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். இவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்