சதுரகிரிமலையில் புரட்டாசி அமாவாசை தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்…..கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்……

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, இன்று அதிகாலையில் இருந்தே அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வரத்துவங்கியது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், இன்று புரட்டாசி அமாவாசை நாள் என்பதால், தமிழகத்தின் பல பகுிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக திரளாக வந்துள்ளனர். இன்று காலையில் வனத்துறை நுழைவு வாயிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பக்தர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பே மலையில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். இன்று ஓரளவு குறைவான பக்தர்கள் மட்டுமே வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பாதுகாப்பு பணியில் குறைந்து அளவிலான போலீசார் இருந்ததால், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி திணறினர். வனத்துறையினரும், போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்தி, பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதித்தனர். மேலும் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களில் அதிகமாக வந்திருப்பதால் வாகனங்களை நிறுத்துவதிலும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் சதுரகிரி மலைக்கு அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கும் போது, பாதுகாப்பு பணிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..