Home செய்திகள் தென்காசியில் துணிகரம்;பட்டப்பகலில் வீடு புகுந்து தங்க நகை கொள்ளை-3 பேர் கைது..

தென்காசியில் துணிகரம்;பட்டப்பகலில் வீடு புகுந்து தங்க நகை கொள்ளை-3 பேர் கைது..

by mohan

தென்காசியில் பட்டப்பகலில் வீடு புகுந்து சாமில் உரிமையாளர் மனைவியை கட்டிப் போட்டுவிட்டு தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 126 பவுன் நகைகள், கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.தென்காசி மட்டப்பா தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். சா மில் உரிமையாளர். இவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த 7.9.2020 அன்று விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று பட்டப்பகலில் இரண்டு பேர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த விஜயலட்சுமியை கட்டிப்போட்டுவிட்டு அவரை மிரட்டி பீரோவில் இருந்த 126 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.இதுகுறித்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வந்தனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் அறிவுரையின் பேரில் தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மாதவன்,மாரிமுத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தனிப்படை போலீசார் தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு வந்த 3 பேர்போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அம்மூவரையும் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் இம்மூவரும் ஜெயபால் வீட்டில் தங்கநகை, பணம் கொள்ளையடித்தவர்கள் என்றும், அவர்கள் மேலமெஞ்ஞானபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த திருமலை முத்து மகன் மணிகண்டன் (வயது 27), வேம்பு மகன் ரமேஷ் (27), மேலக் கடையநல்லூரைச் சேர்ந்த நாராயணராஜ் மகன் அருண்சுரேஷ் (31) என தெரிய வந்தது.இம்மூவரையும் கைதுசெய்த போலீசார் மணிகண்டன் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 126 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார், பைக், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர்களும் தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் நிருபர்களிடம் கூறியதாவது:தென்காசி மரக்கடை அதிபர் ஜெயபால்வீட்டில் கடந்த மாதம் 7ம் தேதி தங்க நகைகள், பணம் கொள்யைடிக்கப்பட்ட வழக்கில் தென்காசி காவல்துறையினர் இரவு, பகலாக தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.சந்தேகத்தின் பேரில் மரக்கடையில் வேலை பார்த்தவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தனிப்படை போலீசாரின் கண்காணிப்பில் இருந்த போது நகைகளை விற்க முயன்ற போது தனிப்படையினரிடம் கொள்ளையர்கள் பிடிபட்டனர்.இவ்வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், ஆய்வாளர் ஆடிவேல், உதவி ஆய்வாளர்கள் மாதவன், மாரிமுத்து மற்றும் தனிப்படை போலீசாரை மனதார பாராட்டுகிறேன்.மேலும் உதவியாக இருந்த ஊடகங்கள் மற்றும் அப்பகுதியில் சிசிடிவி பொருத்தி இருந்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட காவலதுறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!