உசிலம்பட்டி அருகே தனியார் வேளாண் கல்லூரி நிர்வாகம் கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தனியார் வேளாண் விவசாய கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி செயல்பட்டு வரும் பகுதியில் கிராமத்திற்கு சொந்தமான மகாலிங்கம் கோயில், வரத்து ஓடைகள், மற்றும் மலைப்பகுதிக்கு செல்லும் பரம்பரை பாதைகள் போன்றவைகளை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கல்லூரியை சுற்றிலும் மின்சார கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் நடமாட மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆக்கிரமிப்புக்களை அகற்ற அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 500க்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது கோட்டாட்சியர் ராஜ்குமார் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

உசிலை சிந்தனியா