சோழவந்தான்வடகரை கண்மாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாய பணிகள் பாதிப்பு.

மதுரை மாவட்டத்தின் மிகபெரிய பிரதான கண்மாய்களில் ஒன்று சோழவந்தான் வடகரை கண் மாய். சோழவந்தான் மற்றும் ஆலங்கொட்டாரம், ரிஷபம், திருமால் நத்தம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1176 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் வைகை அணையிலிருந்து கடந்த ஆகஸ்டு 29 ஆம் தேதி பேரணை முதல் கள்ளந்திரி வரை சுமார் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற தண்ணீர் திறக்கபட்டது. அதனை தொடர்ந்து சோழவந்தான் வடகரை கண்மாயில் உள்ள 9 மடைகளில் இருந்து பொதுப்பணித்துறை மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் தற்போது 29 நாட்களை கடந்தும் கண்மாயில் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிபடுகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளது. இது குறித்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், தண்ணீர் திறந்து விடாமல் பாசன அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை மடை திறப்பாளர் இக்கண்மாயில் உள்ள 9 மடைகளை முறையாக பராமரிக்காததால் மதகுகள் பழுதடைந்துள்ளது, என்றும் இக்கண்மாய்க்கு போதிய தண்ணீர் நிரப்பாமலும், பாசனத்திற்கு நீர் திறந்து விடாமலும் பாசன அதிகாரிகள் விவசாயிகளுடைய வயிற்றில் அடிப்பது போல் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

விவசாயி திருப்பதி கூறுகையில்:- எங்கள் பகுதியில் இரு போகம் விவசாயம் நடைபெறும். ஆனால் தற்போது கண்மாயில் தண்ணீர் திறக்காததால் நாற்றாங்கால், உழவு பணிகள் நடக்கவில்லை. நாங்கள் பொதுப்பணி துறை அதிகாரியிடம் முறையிட்டபோது அவர் தண்ணீர் திறக்க எங்களிடம் லஞ்சம் எதிர்பார்ப்பது போல் தெரிகிறது. நாங்களே சில ஆண்டுகளாக இயற்கை சீற்றத்தால் பல சிரமத்திற்கு ஆளாகி உள்ள நிலையில் சம்பளம் வாங்கக்கூடிய அதிகாரிகள் எங்களிடம் லஞ்சம் கேட்பது, வேதனை அளிக்கிறது. சாலாச்சிபுரம், நரிமேடு போன்ற பகுதியில்  விவசாயிகள் பெரியார் வாய்க்கால் தண்ணீர் மூலம் விவசாயம் செய்து கொண்டு இருக்கின்றனர். வட கரை கண்மாய் பாசனத்தில் உள்ள  விவசாயிகள் நாற்றாங்கால் உழவு கூட செய்யமுடியவில்லை என்றார். இப்படி ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணையும் விடுவதுபோல் பாரபட்சமாக அதிகாரிகள் நடந்துகொள்கின்றனர், என்றார்.

‌செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்