கருப்பாநதி அணையில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கருப்பாநதி அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தண்ணீர் திறந்து வைத்தார். கருப்பாநதி அணையில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி அணை, அடவிநயினார் அணை, கடனாநதி அணை, இராம நதி அணை ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் கருப்பாநதி அணை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கடையநல்லூர் வட்டம், கருப்பாநதி பாசனத் திட்டத்தின் கீழுள்ள நேரடி கால்வாயின் மூலம் 1082.23 ஏக்கர் நேரடி பாசன நிலங்களுக்கு 97 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 25 கனஅடி வீதம் 180.37 மி.க.அடிக்கு மிகாமல் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள 7 கிராமங்கள் விவசாய பயன்பெறும்.

தென்காசி வட்டம் கடனா பாசனத் திட்டத்தின் கீழுள்ள கால்வாய்களின் மூலம் 3987.57 ஏக்கர் நேரடிப் பாசன நிலங்களுக்கு கடனா நீர்த்தேக்கத்திலிருந்து 97 நாட்களுக்கு வினாடிக்கு 125 கனஅடி வீதம் 664.60 மி.க.அடிக்கு மிகாமல் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் தென்காசி, அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள 12 கிராமங்கள் விவசாய பயன்பெறும்.

தென்காசி வட்டம், இராமநதி பாசனத்திட்டத்தின் கீழுள்ள கால்வாய்களின் மூலம் 1008.19 ஏக்கர் நேரடி பாசன நிலங்களுக்கு 97 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 60 கனஅடி வீதம் 168.03 மி.க.அடிக்கு மிகாமல் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் தென்காசி வட்டத்தில் உள்ள 11 கிராமங்கள் விவசாய பயன்பெறும்.

நடப்பாண்டு கார் பருவ சாகுபடிக்கு 21.08.2020 முதல் 25.11.2020 வரை 97 நாட்களுக்கு இந்த நான்கு அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை வட்டத்திலுள்ள 42 கிராமங்கள் மூலம் 8225.46 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் விவசாய பாசன வசதி பெறும்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal