நீதிமன்றத்தில் இயற்கை மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இயற்கை மருத்துவ முகாம் நிகழ்வில் கலந்து கொண்டது மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தின் நீதிபதி முருகன் அவர்கள் இரண்டு நாட்களில் இயற்கை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதில் தாங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்து இருந்தார். அந்த அடிப்படையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இயற்கை மருத்துவ முகாம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். தேவையான நேரத்தில் தேவையான மருத்துவ முகாம் என்பதுதான் உண்மை. அதை மிகச் சிறப்பாக யோசித்து அருமையாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த நீதிபதி முருகன் அவர்களுக்கும், கோர்ட் அலுவலர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திப்பிலி சூப்,இயற்கை சத்து பானங்கள் சாப்பிடுதல் :

அந்த நிகழ்வில் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இயற்கை மருத்துவர்கள் பிரபு மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்கள். இயற்கை மருத்துவம்,யோகா தொடர்பான தகவல்களை மிக இயல்பாக எடுத்துக் கூறினார்கள். நிகழ்வு ஆரம்பித்தவுடன் எங்களுக்கு அரசு மருத்துவமனையின் சார்பாக அதிமதுரம் கலந்த மூலிகை சாறு வழங்கப்பட்டது. மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து இயற்கை முறையிலான பயிர்வகைகள் வழங்கப்பட்டது. மீண்டும் அரை மணி நேரம் கழித்து திப்பிலி சூப்பு வழங்கப்பட்டது.

எளிய முறையில் யோகா கற்று கொடுத்த அரசு மருத்துவர்கள் :

முகாமில் யோகாவும் எங்களுக்கு மிக எளிய முறையில் பிரபு மற்றும் கார்த்திகேயன் ஆகியோரால் செய்து காண்பிக்கப்பட்டது. யோகா தொடர்பாக இன்று நான் பல்வேறு தகவல்களை கற்றுக்கொண்டேன். வாய் கொப்பளித்தல், மூச்சுப்பயிற்சி, கண் சுத்தப்படுத்துதல் போன்ற தகவல்களை நேரடியாக செய்து காண்பித்தனர் . நன்றாக மூக்குக் கழுவுதல் மூலமாக என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது, வீசிங் பிரச்சனைகள் எல்லாம் குறையும் என்கிற தகவலையும் எடுத்துக் கூறினார்கள். இந்த நிகழ்வில் கோர்ட்டில் இருந்து அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும்,வக்கீல்களும் அனைவரும் பங்கேற்றனர். முகாமில் கலந்துகொண்டரின் பல்வேறு சந்தேகங்களுக்கு அரசு மருத்துவர்கள் பதில் கூறினார்கள்.

உடல்நிலையை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் – நீதிபதி பேச்சு :

நீதிபதி முருகன் அவர்கள் நிகழ்வில் பேசியபோது , இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக திருமூலர் கூறிய தகவலைதான் இன்று நாம் இயற்கை மருத்துவ முறைகளாக பயன்படுத்துகின்றோம். தொடர்ந்து இதனை பயன்படுத்தினால் நல்ல உடல்நிலையை அடையலாம் என்று மிக எளிமையாக கூறினார்கள்.நீதிமன்றத்தில் தொடர்ந்து பணியாளர்கள் பணிக்கு வருவதால் அவர்களது பாதுகாப்பு கருதியும் ,உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இயற்கை மருத்துவ முகாம் கோர்ட்டு வளாகத்தில் நடத்தப்பட்டதாக நீதிபதி அவர்கள் தெரிவித்தார். பணம்,பதவி எது இருந்தாலும் உடல்நிலை நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பேசினார்கள்.

புதிய தகவல்களை அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பு :

பணி அலுவலர்களின் நலன்கருதி, அவர்களின் குடும்ப நலன் கருதி மிகச்சிறப்பான முறையில் இயற்கை மருத்துவ முகாமை நீதிபதி அவர்கள் நடத்தியதற்கும் , எனக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு அளித்ததற்கும் நீதிபதி முருகன் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இயற்கை மருத்துவ முகாமில் எங்களுக்கு பல்வேறு நாட்டு மருந்துகளையும் வழங்கினார்கள். அவை அனைத்தும் இயற்கை தொடர்பான மருந்துப் பொருள்கள். மருந்து போன்று ஒரு சொட்டு கையில் வழங்கி அதனை நன்றாக தேய்த்து மூக்கில் இழுத்தால் உள்ள சளி அனைத்தும் வெளியே வந்துவிடும் என்று தெரிவித்தார்கள். நாங்களும் அதனை வாங்கி அங்கிருந்த அனைவரும் செய்து பார்த்தோம். உண்மையிலேயே நல்ல மாற்றம் தெரிந்தது. இதுபோன்ற தகவல்கள் இன்று தான் எனக்கு தெரியும். இது போன்ற தகவல்களை நாம் நேரில் பார்த்து அதை தொட்டு உணர்ந்து கொள்ளும் போது நமக்குள் பல்வேறு நல்ல மாற்றங்களும், பல்வேறு புதிய தகவல்களும் தெரிந்து கொள்ள முடிகின்றது. இதனை நல்ல முறையில் சிந்தித்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த நீதிபதி முருகன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாராட்டபட வேண்டிய அரசு இயற்கை மருத்துவர்கள் :

அரசு மருத்துவர்கள் பேசும்பொழுது, கொரோனா காலத்திலும் பல்வேறு இடங்களில் சென்று இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி வருவதாகவும், கொரோனா பாதித்தவர்களுக்கு தாங்கள் சென்று யோகா பயிற்சிகள் அளித்து வருவதாகவும் தெரிவித்தார். மிகவும் போற்றப்பட வேண்டிய ஒரு நல்ல விஷயம் இது என்பது என்னுடைய கருத்து. இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பட விளக்கம் :தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இயற்கை மருத்துவமுகாம் நீதிபதி முருகன் தலைமையில் நடைபெற்றது.அரசு மருத்துவர்கள் பிரபு மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் உடல் நிலையை நல்ல நிலையில் வைத்து பாதுகாக்க யோகா பயிற்சி அளித்தனர்.

செய்தியாளர் .வி காளமேகம். மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..