தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுரண்டையில் அமைத்திட வேண்டும்- தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை..

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுரண்டையில்‌ அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டம் பெரியதாக இருந்ததாலும், பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் எளிதில் சென்றடையவும், நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் தென்காசி மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், வியாபாரிகள் என அனைவரும் முன்னதாக தொடர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சட்டமன்றத்தில் பேசியும், தமிழக முதல்வரிடம் நேரில் வலியுறுத்தியதின் பயனாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தென்காசி மாவட்டம் உதயமானது.

இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தென்காசி மாவட்டத்தின் மையபகுதியான தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுரண்டையில் அமைக்க வேண்டும் எனவும், அதற்கு தேவையான இடவசதி முழுவதையும் சுரண்டை – வீகேபுதூர் சாலையில் இலவசமாக வழங்க தயாராக உள்ளதாகவும் சுரண்டை பகுதி வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வர் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏற்கனவே சுரண்டை தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் மிக முக்கியமான வர்த்தக நகரமாக உள்ளது.தென்காசி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மைய பகுதியாகவும், சாலை மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் ‌‌‌போதிய பஸ் வசதி உள்ள நகரமாகவும், பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக எளிதில் வந்து  செல்லும் வசதி உள்ள நகரமாகவும் விளங்குகின்றது. சுரண்டையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆபிஸை அமைக்கும் பட்சத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பெரும் பயனடைவார்கள் என்பதுடன் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அனைத்திலும் சிறந்து விளங்கும் சுரண்டையில் அமைக்க ஆவண செய்ய வேண்டும் தமிழக முதல்வருக்கு பொதுமக்கள், வியாபாரிகள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..