மயிலாடுதுறையில் ரத்ததான முகாம்

கொரோனா பாதிப்பு நேரத்தில் ரத்தம் தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் காவிரி குழுமம் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்த தான முகாம் குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.முகாமிற்கு அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர்.சிவக்குமார், குருஞானசம்பந்தர் பள்ளி செயலாளர் பாஸ்கரன், பல்மருத்துவர் ராஜசிம்மன், மருந்தக மற்றும் ஆய்வக நிர்வாகி வேல்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி குழும செயலாளர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.

முகாமிற்கு தலைமை வகித்து பேசிய காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன், ஊருக்கு நல்லது செய்வோம் என்ற நோக்கோடு மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக நலப் பணிகளை செய்து வரும் காவிரி அமைப்பு, கொரோனா நோய்தொற்று மிக வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி இந்த முகாம் காவிரி அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ரத்தம் தேவைப்படும் காலங்களில் இதுபோன்ற முகாம்களை நடத்தி கூடுதலாக ரத்தம் வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக கூறினார். ஆடிட்டர் குரு சம்பத்குமார் முகாமை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

முகாம் தொடக்க விழாவில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்த மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் ஜனார்த்தனன், அரவிந்த் கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் பூமிநாதன், சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார் ஜெயின், கார்த்திகேயன், மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் சங்க நிர்வாக அலுவலர் மகாலெட்சுமி ஆகியோரின் பணிகளை பாராட்டி காவிரி அமைப்பு சார்பில் “கோவிட் ஸ்டார்” விருது வழங்கப்பட்டது.முகாமில் காவிரி அமைப்பின் இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 60 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். காவிரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை காவிரி அமைப்பு நிர்வாகிகள் மற்றும் அரசு மருத்துவமனை குழுவினர் செய்திருந்தனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..