கொரானா நெருக்கடி நேரத்திலும் தன் யானைகளை கண்ணின் இமை போல காத்து வரும் உரிமையாளர்

மதுரை கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த 60 வயது பெரியவர் தான் ரங்கன். இவர் தான் கொரானா நெருக்கடி நிறைந்த நேரத்திலும் தனது இரண்டு யானைகளை பாசத்தோடும், பரிவோடும் வளர்த்து வருகிறார். ரங்கனின் குடும்பத்தினர் நான்கு தலைமுறையாக, குறிப்பாக அவருடைய பாட்டன் காலத்திலிருந்தே யானைகளை வீட்டில் வளர்த்து வருவதாக தெரிவிக்கிறார். தற்போது ரங்கன் இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார். முதலில் தல்லாகுளம் பகுதியில் யானைகளை வளர்த்து வந்த நிலையில் அங்கு போதிய இடவசதி இல்லாததால் தனது யானைகளுக்காகவே அங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரம் மதுரைக்கு புறநகர் பகுதியான கடச்சனேந்தல் பகுதியில் இடம் வாங்கி செட் அமைத்து அங்கு தனது யானைகளை வளர்த்து வருகிறார். ரங்கன் கண்காணிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 30 வருடங்களாக இரண்டு யானைகள் வளர்ந்து வருகின்றன. ரங்கன் வளர்த்து வரும் இரண்டு யானைகளுமே பெண் யானைகள். ஒரு யானையின் பெயர் லட்சுமி வயது 40, இன்னொரு யானையின் பெயர் குஷ்மா வயது 43. கொரானா இல்லாத காலங்களில் இரண்டு யானைகளையும் கோவில் நிகழ்ச்சிகள், கல்யாண நிகழ்வுகள், மாப்பிள்ளை அழைப்பு, அரசு விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அனுப்பி அதன் மூலம் வருவாய் ஈட்டி அதன் மூலம் யானைகளை கவனித்து வந்தார்.. மேலும் தமிழகத்தில் பெரிய திருக்கோவில்களில் யானைகள் இருந்தாலும், சில மாவட்டங்களில் உள்ள முக்கிய திருக்கோவில்களில் யானைகள் இல்லாததால் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் என மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், இராமநாதபுரம், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்ட கோவில் நிகழ்ச்சிகளில் யானைகள் பங்கேற்றுள்ளதாக ரங்கன் தெரிவிக்கிறார். தற்போது நான்கு மாதங்களாக கொரானா வைரஸ் பரவலால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது போல, யானை உரிமையாளரான ரங்கனும் கடுமையாக பாதிப்படைந்துள்ளார். ரங்கனின் பாதிப்பு தற்போது யானைகளையும் கடுமையாக பாதித்துள்ளது என்றே கூறலாம்.

ரங்கனுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், அவர்கள் நன்கு படித்து நல்ல வேலையில் இருந்த நிலையில், தற்போது கொரானா காலகட்டம் என்பதால் அவர்களும் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். தற்போது கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருப்பதோடு, பொதுநிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு தடை உள்ள நிலையில், யானைகளுக்கு உணவு வழங்குவதற்கே சிரமம் அடைந்துள்ளதாகவும் வேதனைப்படுகிறார். கொரானா நெருக்கடியான இந்த நேரத்தில் தங்களுக்கு உணவு கிடைக்கவே கடும் இன்னல் உள்ள சூழ்நிலையில், யானகளுக்கும் உணவளிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவிக்கிறார். குறிப்பாக யானைகளுக்கு ஒரு வாரம் மட்டும் சோள நாத்துகட்டு 15,000 ரூபாய்க்கு வாங்க வேண்டி இருப்பதாகவும், பிறகு அரிசி சாப்பாடு தினமும் 5 கிலோ அளவிலும், இதர மருத்து செலவுகள் எல்லாம் சேர்த்து மாதம் 90,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகும் எனக்கூறுகிறார். கொரானா பேரிடரில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை போல, தனது யானைகள் மூலம் வருவாய் கிடைக்காததால் அவைகளுக்கு உணவு வழங்க சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..