கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனைகடும் நடவடிக்கை தேவை; வைகோ அறிக்கை!

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை
கடும் நடவடிக்கை தேவை; வைகோ அறிக்கை!

மனிதகுல வரலாற்றில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் முற்றுப்பெறவில்லை.

இச்சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் (Remdesivir), டோசிலிசம்ப் (Tocilizumab) ஆகிய மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை அளிப்பதன் மூலம் நோயாளிகள் உயிர் பிழைப்பார்கள் என்பதற்கு நூறு விழுக்காடு உத்தரவாதம் இல்லை. ஆனால் இவற்றை நோயாளிகளுக்கு தருவதன் மூலம் ஓரளவு நம்பிக்கை ஏற்படுவதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி அதிக காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் கொடுக்கலாம் என்று ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைத்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் போதிய அளவு கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து நாளேடுகளில் வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை வழங்க, வெளியில் உள்ள முகவர்களிடம் வாங்கி வருமாறு கூறுகின்றனர். முகவரிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரே தொடர்பில் உள்ளனர். இம்மருந்துகள் கிடைக்காமல் தட்டுப்பாடுகள் நிலவுவதால், மருந்து முகவர்கள் கள்ளச் சந்தையில் மூன்று மடங்கு அதிக விலை வைத்து விற்பனை செய்து, கொள்ளை அடிப்பதாக நாளேட்டில் ஆதாரங்களுடன் செய்தி வந்துள்ளது.

ரெம்டிசிவிர் ஒரு குப்பிக்கு ரூ.3100 என்ற அளவில் (12 % ஜி.எஸ்.டி. நீங்கலாக) அரசு கொள்முதல் செய்கிறது. இதன் எம்.ஆர்.பி. விலை ரூபாய் 5 ஆயிரம். (ஜி.எஸ்.டி.சேர்க்காமல்) என விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் மருந்து முகவர்கள் கள்ளச் சந்தையில் ரெம்டிசிவிர் மருந்தை ரூ.12500 முதல் ரூ.15000 என மூன்று மடங்கு விலைக்கு விற்று லாபம் ஈட்டுகின்றனர்.

இதைப் போலவே டோசிலிசம்ப் மருந்து ஒரு குப்பிக்கு ஜி.எஸ்.டி. நீங்கலாக ரூ.28500 ஆக அரசு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் கள்ளச் சந்தையில் இதன் விலை ரூ.75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

திருச்சியில் தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ரெம்டிசிவிர் மருந்தை 6 குப்பிக்கு ரூ.75 ஆயிரம் முகவரிடம் கொடுத்து கள்ளச் சந்தையில் வாங்கி பயன்படுத்தியதை அறிந்த இந்திய மருந்து சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா அந்த முகவரிடமே நேரடையாகப் பேசி உண்மையை அறிந்துள்ளார். பின்னர் அதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதே போன்று திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவருக்கு மருந்து இருப்பு இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் முகவரிடம் வாங்கிக் கொடுத்து மூன்று நாள் சிகிச்சை செலவு ரூ. 1.40 இலட்சம் ஆனதாக நாளேடு சுட்டிக்காட்டி உள்ளது.

ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் தட்டுப்பாடு குறித்தும், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது குறித்தும் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் அரசிடமே இந்த மருந்துகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம். கள்ளச் சந்தையில் மருந்து விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கடும் என்று அவர் எச்சரித்து இருப்பது ஆறுதல் தருகிறது.

மக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல், நாடே துயரக் கடலில் மூழ்கிக் கிடக்கும் போது, உயிர் காக்கும் மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்கவும், செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கவும் முனைந்துள்ள கும்பலைக் கண்டறிந்து, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு தட்டுப்பாடுகள் இன்றி ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply