பக்ரீத் தினத்தில் ஆடு, மாடுகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை! தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!

பக்ரீத் தினத்தில் ஆடு, மாடுகளை பலியிட உயர்நீதிமன்றம் தடை! தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பக்ரீத் பண்டிகையையொட்டி கொரோனாவை காரணம் காட்டியும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் படியும் பொது இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு தேவையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

மதுரை வட இந்தியர் சங்கத்தின் தலைவர் ஹூக்கும் சிங் என்பவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கப்படாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960- ஐ சுட்டிக்காட்டியும் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ள நீதிமன்றம், அதே சட்டத்தின் பிரிவு 28 மதரீதியான நிகழ்வுகளுக்கு, நம்பிக்கைகளுக்கு விலங்குகளை பலியிடுவதை தடை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளாமலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆகவே, இந்த தீர்ப்பு ஒரு சாராரின் வாதத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு, இன்னொரு சாராரின் கருத்தை கேட்காமலேயே வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

ஆகவே, உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் வகையிலும், சிறுபான்மை மக்களின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் தமிழக அரசு உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, நாளை மறுதினம் கொண்டாடப்படும் பக்ரீத் தினத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் மத நம்பிக்கை பிரகாரம் ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடும் நிகழ்வுக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இந்த உத்தரவுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சியும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம் ஒருங்கிணைப்பாளர் SDPI கட்சி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..