காமராஜரின் 118வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மணிமண்டபத்தில் மாலை அணிவிப்பு விழாவில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக-அதிமுக..

கர்ம விரர் காமராஜரின் 118வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபத்திலுள்ள காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இடத்தில் சிலைக்கு முன்பு நின்று அதிமுகவினரும் திமுக எம்எல்ஏக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் மறைந்த தமிழக முதல்வர் காமராஜரின் 118 வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அவரின் சிலைக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபத்துக்கு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவிக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, தமிழகத்திற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். அப்போது காமராஜர் சிலைக்கு முன்பு நின்றிருந்த திமுக எம்எல்ஏ ஆஸ்டின், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை பார்த்து அரசின் திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பதற்கும், அரசு திட்டங்களை திறந்து வைப்பதற்கும் மக்கள் பிரதிநிதியான என்னை அழைக்காமல் புறக்கணிப்பது ஏன்? என கேட்டார். அப்போது இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நின்றிருந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் இருவரையும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ சமாதானப்படுத்தி வைத்தார். பின்னர் அனைவரும் இணைந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோல் வெளியில் வந்தபிறகும் இது குறித்த வாக்குவாதம் தொடர்ந்தது. பின்னர் 2 எம்எல்ஏக்களையும் தளவாய்சுந்தரம் தனியாக அழைத்துக்கொண்டு போய் ஏதோ கூறிவிட்டு காரில் ஏறி சென்று விட்டார்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்கும், திறந்து வைப்பதற்கும் மக்கள் பிரதிநிதியான திமுக எம்எல்ஏ ஆஸ்டின் புறக்கணிக்கப்படுவதாகவும் அவருக்கு தெரியாமல் அரசு அதிகாரிகளின் உதவியுடன் தமிழகத்திற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அரசு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் ஆஸ்டின் எம்எல்ஏ கூறிவந்தார். இந்நிலையில் இன்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தளவாய் சுந்தரம் பல்வேறு அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு, புனரமைப்பு பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் குறித்த எந்த அறிவிப்பும் எம்எல்ஏவான ஆஸ்டினுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேப்போல் தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களை ஆஸ்டின் எம்எல்ஏ தான் கொண்டு வந்ததாக ஆஸ்டின் எம்எல்ஏ கூறுவதாகவும் அதற்கு கண்டனம் தெரிவித்து தெங்கம்புதூர் அதிமுக பேரூர் சார்பில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இரு கட்சியினருக்கும் இடையேயான இந்த அதிகார மோதல் எப்போது முடிவுக்கு வரும் என காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..