பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்-குஜராத் கான்ஸ்டபிள் சுனிதா பேச்சு சமூக வலை தளங்களில் வைரல்…

குஜராத் மாநிலத்தில் ஊரடங்கை மீறிய அமைச்சர் மகனின் காரை நிறுத்திய பெண் போலீஸ் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குஜராத்தில் சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிளாக இருப்பவர் சுனிதா யாதவ், இவர் கடந்த புதன்கிழமை இரவு சூரத்தின் மங்கத் சௌக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறி ஐந்து பேர் கொண்ட கும்பல் முகக்கவசம் கூட அணியாமல் காரில் வந்துள்ளனர். சுனிதா அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் தன் நண்பரும் குஜராத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானிக்கு போன் செய்து சம்பவத்தை விளக்கியுள்ளனர்.

இதையடுத்து சில மணி நேரத்தில் அமைச்சரின் காரில் அவர் மகன் பிரகாஷ் வந்து, தன் நண்பர்களை விடுவிக்கும்படி கேட்டுள்ளார், ஆனால், கான்ஸ்டபிள் சுனிதா விட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

`ஊரடங்கு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்தச் சமயத்தில் இந்தியப் பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என சுனிதா கூறியுள்ளார். அதற்கு அமைச்சரின் மகன் `உங்களை (சுனிதா) 365 நாள்களும் இதே இடத்தில் நிற்க வைப்பேன்’ என்று கூற, `நான் உங்கள் வீட்டுப் பணியாளோ அடிமையோ இல்லை’ என சுனிதா பதில் அளித்துள்ளார்.

பிறகு சுனிதா, தன் காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து விஷயத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் சம்பவ இடத்திலிருந்து வெளியேறுமாறு சுனிதாவுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் மகனும் கான்ஸ்டபிள் சுனிதாவும் பேசிக்கொள்ளும் இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமைச்சரின் மகனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கான்ஸ்டபிள் சுனிதாவுக்கு பாராட்டும் ஆதரவும் தெரிவித்தும் நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தித்தொகுப்பு
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image