ராமநாதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

இராமநாதபுரம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளான மதுரையார் தெரு மற்றும் முத்துகோரங்கித் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு மல்டி வைட்டமின் மற்றும் சிங்க் சல்பேட் மாத்திரைகள் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பல்வேறு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் இன்று (11.7.2020) ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் இதுவரை 1691 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 674 நபர்கள் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 985 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிப்பதற்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம்முகாம்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி பரிசோதனை செய்யப்பட்டு மல்டி வைட்டமின் மற்றும் சிங்க் சல்பேட் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இப்பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை தவிர்ப்பதற்கு உப்பு கலந்த நீரால் வாய் சுத்தம் செய்தல், ஆவி பிடித்தல் போன்று அவரவர் வீடுகளிலேயே கடைபிடிக்கக்கூடிய எளிய நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட சத்தான உணவு வகைகள், பழங்கள், பழச்சாறுகள் உட்கொள்வது குறித்தும், நோய் எதிர்ப்பு சக்தி உடைய மஞ்சள், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை உணவில் அதிகப்படியாகசேர்த்துக் கொள்வது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். முன்னதாக, இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த உறுதிமொழி நிகழ்வின்போது மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ஏ.சகாய ஸ்டீபன்ராஜ், இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.அல்லி உட்பட பலர் உடனிருந்தனர்.இராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் சி.அஜித்பிரபு குமார், நகராட்சி ஆணையாளர் என்.விஸ்வநாதன், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை, வட்டார மருத்துவ அலுவலர் மரு.மகேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image