ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்; ஒட்டு மொத்த தமிழர்களின் மீதான தாக்குதல்- பி.ஆர்.பாண்டியன் கண்டனம்..

ஊடகவியலாளர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் ஒட்டு மொத்த தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதாக பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.இந்த நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். இது குறித்து மன்னார்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

தமிழ்நாட்டில் சமீப காலமாக காவிரி உரிமைக்கான போராட்டம், விவசாயிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சினைகள் மீட்பு,தமிழ் மொழி,கலாச்சாரத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கல்வி மீது துவக்கப்படும் தாக்குதல்கள், கூட்டாட்சி தத்துவத்தை ஒடுக்க நினைப்பது, பொதுத் துறைகள் தனியாருக்கு தாரைவார்ப்பது போன்ற மக்கள் விரோத சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிரான அரசியல் ரீதியான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.இது குறித்து மக்களின் எண்ணங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசின் கொள்கை நிலைகள் தெளிவு படுத்துவதற்கான சாதனமாக ஊடகங்கள் மற்றும் ஊடகத்துறையினர் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

பாதிக்கப்படும் மக்களின் பேராயுதமாகவும் ஊடகங்கள் விளங்கி வருகிறது. இவற்றின் மூலம் கிடைக்கும் கருத்துக்களை உள் வாங்கி மக்களுக்கான வகையில் தங்களை மாற்றிக் கொள்வது நாகரிகமான அரசியல் பண்பாடாக அமையும். ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகளின் போர்வையில் தங்களை மக்களிடம் பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சுய விளம்பர நோக்கோடு வெளியிடப்படும் சில நபர்களின் அவதூறு கருத்துக்கள் மக்களிடம் எடுபடவில்லை. இதனால் வெறுப்படைந்த சிலர் மக்கள் மத்தியில் ஜனநாயக அடிப்படையில் செயல்படும் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களின் நிர்வாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், முதன்மை செய்தியாளர்களுடைய ஊடக விமர்சனங்களை அரசியல், அறிவு பூர்வமாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.

ஊடக விமர்சனங்களுக்கு மக்கள் மதிப்பளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சில அரசியல் இயக்கங்களின் பின்புலத்தோடு ஊடக விமர்சகர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில் அச்சுறுத்தும் வகையிலும், கீழ்த்தரமான வகையில் செய்திகள் ஒரு சில நபர்கள் வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு இதனை தூண்டி விடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகம் பண்பாட்டு கலாச்சாரங்களோடு அரசியலும், மக்களும் பின்னி பிணைக்கபட்டுள்ள நிலையில், இது மாதிரியான தவறான பிற்போக்குவாத விமர்சனங்களால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை தமிழக விவசாயிகள் சார்பில் எச்சரிக்கிறேன்.ஊடகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஒட்டு மொத்த தமிழர்கள் மீது நடத்தப்படும் தக்குதல்கள் என்பதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் உணர வேண்டும் இவ்வாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image