குவைத் நாட்டிலிருந்து ஆன்லைன் வழியாக நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் குவைத் நாட்டிலிருந்து வள்ளிசரண் செஸ் மையம் நடத்தும் ஆன்லைன் சதுரங்க போட்டிகளில் பங்கேற்றனர்.15 புள்ளிகள் பெற்று மாணவர் ஜோயல் முதலிடம் பிடித்தார்.கடந்த இரண்டு மாத காலமாக கொரோனா நேரத்தில் பள்ளி மாணவர்கள் ஊரடங்களில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த நாள்களில் மாணவர்களின் ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் குவைத்தில் இருந்து செஸ் பயிற்சியாளர் வள்ளியம்மை சரவணன் குவைத் நேரப்படி காலை 4 மணிக்கு தயாராகி இந்திய நேரம் காலை 7 மணி முதல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக சதுரங்க பயிற்சி வழங்கி வருகின்றார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலை பார்க்கும் நிலையில், சில மாணவர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் மொபைல் போன் உள்ளது.அதிலும் ஒரு சில மாணவர்களிடம் மட்டுமே செஸ் போர்டு மற்றும் காயின் உள்ளது.அந்த மாணவர்களை கண்டுபிடித்து ,ஒருங்கிணைத்து,ரூக் பிரிவு,கிங் பிரிவு,குயின் பிரிவு என குழுக்களாக மாணவர்களை பிரித்துக்கொண்டு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளித்து வருகின்றார் .

குவைத்திலிருந்து பயிற்சியாளர் வள்ளியம்மை தனது சதுரங்க அமைப்பின் மூலமாக இப்பள்ளி மாணவர்களுக்குள் போட்டிகள் நடத்தினார் . பள்ளி மாணவர்களுக்கு இடையே ஆன்லைன் வழியாக வீட்டிலிருந்தபடியே செஸ் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் முத்துலட்சுமி, செல்வமீனாள் , முத்துமீனாள் ஆகியோரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இப்போட்டிகள் கடந்த வாரம் முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்றது. தினமும் காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் ஆன்லைன் வழியாக மாணவர்கள் தங்களுக்குள்ளேயே விளையாடும் வகையில் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 10 மாணவர்கள் பங்கேற்றனர். ஜோயல் என்கிற மாணவர்கள் 15 புள்ளியை பெற்று முதலிடத்தைப் பிடித்தார். மாணவர்கள் திவ்யஸ்ரீ, ஈஸ்வரன், முத்தையன், பிரதிக்ஷா ஆகியோர் முறையே பதின்மூன்றரை புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர்.சண்முகம் என்கிற மாணவர் 13 புள்ளிகள் எடுத்து மூன்றாம் இடத்தைப் பிடித்தார். மற்ற மாணவர்கள் அனைவரும் பத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளை எடுத்து ஆறுதல் பரிசு பெற்று உள்ளனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் வள்ளி சரண் சதுரங்க அமைப்பின் மூலமாக பள்ளி திறந்த பிறகு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இதன் தொடர்ச்சியாக இப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் சதுரங்க போட்டிகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு , இப்பள்ளி மாணவர்கள் குவைத்தில் உள்ள மாணவர்களுடன் போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பயிற்சியாளர் வள்ளியம்மை தெரிவித்தார்.மாணவர்களுக்கு இப்போட்டிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image