Home செய்திகள்உலக செய்திகள் ஓமின் விதி கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர், கணிதவியலாளர், ஜார்ஜ் சைமன் ஓம் நினைவு தினம் இன்று (ஜூலை 6, 1854).

ஓமின் விதி கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர், கணிதவியலாளர், ஜார்ஜ் சைமன் ஓம் நினைவு தினம் இன்று (ஜூலை 6, 1854).

by mohan

ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மார்ச் 16, 1789ல் எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத் ஜெர்மனியில் பிறந்தார். எர்லாங்கென் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம் இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டாகண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார். தாமே உருவாக்கிய கருவிகளைக் கொண்டு ஒரு கடத்தியின் இரு முனைகளுக்கு இடையேயான நிலை வேறுபாட்டிற்கும் (மின்னழுத்தம்) அதனால் ஏற்படும் மின்னோட்டத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொடர்பை விவரிப்பதே ஓமின் விதி என அறியப்படுகிறது. அனைத்துலக அலகுகளில் மின்தடைக்கான அலகு இவரது பெயரைக் கொண்டு ஓம் (குறியீடு Ω) என வழங்கப்படுகிறது.

ஒரு மின்கடத்தியில் மின்னழுத்ததைக் கொடுக்கும் போது, அதில் மின்னோட்டம் நடை பெறுகின்றது. அந்த மின்னோட்டத்தின் அளவு அதில் கொடுக்கப்படும் மின்னழுத்தத்தின் அளவைப் பொறுத்திருக்கும். எடுத்துக் காட்டாக, R என்ற மின்தடையம் கொண்ட ஒரு மின் கடத்தியின்(எ.கா. உலோகங்கள், மாழைகள்) இரு முனைகளுக்கிடையே, V என்ற அளவு மின்னழுத்தம்(voltage) கொடுக்கும் போது, I என்ற அளவு மின்னோட்டம்(current) பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்: V=IR . இந்தக் கருத்தை ஜார்ஜ் ஓம் (Georg Ohm) என்ற செருமானிய அறிஞர் 1827-இல் முன் வைத்தார். அவர் கூறிய இக் கருத்து ஓமின் விதி என்று பின்னால் வழங்கப் பட்டது. சுருங்கக் கூறின், ஒரு மின்கடத்தியில் ஓடும் மின்னோட்டம் I அதன் இரு முனைகட்கு நடுவில் கொடுக்கப்படும் மின்னழுத்தம் V-இன் மீது நேர் விகிதச் சார்பு கொண்டிருக்கும் என்பதுதான் ஓமின் விதி.

வேறுவிதமாகக் கூறுவதென்றால், மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையேயான விகிதம் ஒரு மாறிலி ஆகும். அதாவது, இந்த மாறிலி எண் R என்பதே மின் தடை எனப்படும். மின்னோட்டத்தை நீரோட்டத்தோடு ஒப்பிட்டும், ஓமின் விதியை விளங்கிக் கொள்ளலாம். நீர் அழுத்தம் என்பது மின்னழுத்தம், நீரோட்டம் என்பது மின்னோட்டம், நீரோட்டத் தடை என்பது மின்தடை என்று கொண்டால், நீர் அழுத்தம் அதிகமானால் நீரோட்டமும் அதிகமாகும் என்பது மின்னழுத்தம் அதிகமாகும் போது மின்னோட்டம் அதிகமாகும் என்ற ஓமின் விதி போன்று உள்ளது எனலாம்.நீரோட்டத் தடை என்பது நீரோட்டத்தைக் குறைப்பதற்காக வைக்கப் படும் தடைகள் ஆகும்.

ஜார்ஜ் ஓம் அவர்களுக்கு முன்னரே, 1781-இல், என்றி காவன்டிஷ்(Henry Cavendish) என்பவர், வேவ்வேறு அளவுள்ள கண்ணாடிக் குழாய்களில் உப்பு நீரை அடைத்து, அவற்றுள் மினசாரத்தைச் செலுத்தி, பல ஆய்வுகளைச் செய்தார். அதன் படி, மின்னழுத்த அளவு மாறினால் மின்னோட்டம் அளவும் மாறும் என்று கண்டறிந்தார். ஆனால், தம் கண்டுபிடிப்பை மற்ற ஆய்வாளர்கள் யாரிடமும் சொல்லாமல் விட்டு விடவே, இதைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. அதற்குப் பிறகு வந்த ஜேம்சு கிளார்க் மாக்சுவெல்(James Clerk Maxwell) என்ற அறிவியல் அறிஞர் அந்தக் கண்டுபிடிப்பை 1879ல் வெளியிட்டார். ஜார்ஜ் ஓம் அவர்களுக்கு 1841ல் கோப்லி பதக்கம் வழங்கப்பட்டது. ஓமின் விதி கண்டறிந்த ஜார்ஜ் சைமன் ஓம் ஜூலை 6, 1854ல் தனது 65 வது அகவையில் மியூனிக், பவேரியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!