ஏழை பெண்ணுக்கு உதவிய மனிதநேயமிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி-பொது மக்கள் பாராட்டு…

சிறுநீரக பிரச்சினையால் அவதியுற்றுவரும் ஏழை பெண்ணுக்கு கோவை மாவட்ட ஆட்சியர், தமது நிவாரண நிதியில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.மனித நேயமிக்க இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கோவை, வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி(36). இவரது தந்தை 20 வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டார். சகோதரர், சகோதரி ஆகியோர் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில், தனது வயதான தாய் ராஜம்மாள் (80) உடன் ஜோதிமணி மாதம்பட்டியில் வசித்து வருகிறார்.

பிறவியிலேயே இவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருந்துள்ளது. கடந்த 3 வருடத்துக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததன் காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது ஒரு சிறுநீரகம் இருப்பதும், அதுவும் இடம் மாறி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனை தொடர்ந்து அவர் மருந்துகளை உட்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஜோதிமணி குறித்த செய்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.

இதனையறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக தமக்கான நிதியில் இருந்து மருத்துவ உதவியாக 25,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அதன் பின்னர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாதந்தோறும் மருந்திற்கு 6,000 ரூபாய் செலவுகள் ஆவதாகவும், வீட்டு வாடகைக்கு 800 ரூபாய் தேவைப்படுகிறது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

மிகுந்த சிரமத்துடன் இளநீர் விற்று வாழ்க்கை நடத்தி வருவதாகவும் இந்த நேரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் இந்த உதவி எங்களுக்கு பெரிய உதவியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு.ராஜாமணி அவரது மனித நேய செயலுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மீண்டும் மீண்டும் மக்களின் ஆட்சியர் என்பதை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி அவர்கள் நிரூபித்து வருவதாக சமூக ஆர்வலரும் மேட்டுப்பாளையம் வழக்குறைஞருமான ரகுமான் பாராட்டியுள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image