சுரண்டை அருகே பழங்கால சிலை கண்டுபிடிப்பு-நூறு நாள் வேலை திட்ட பணியின் போது கிடைத்ததால் பரபரப்பு..

சுரண்டை அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பழம் பெரும் சிலைகளும் ஓடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலை போன்று சிலையின் தலைப்பகுதி கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மருக்களங்குளம் ஊராட்சி சீவலசமுத்திரம் கிராமத்தில் நூறு நாள் வேலைத் திட்ட‌ பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல பணிகள் நடந்து வந்த நிலையில் ஓடை ஓரத்தில் தோண்டும் போது கல் சத்தம் கேட்டதால் கவனத்துடன் அதனை தோண்டினர். அப்போது அதனை எடுத்து பார்த்த போது முகம் மட்டும் உள்ள ஒரு சிலை இருந்தது தெரியவந்தது.‌ பார்ப்பதற்கு புத்தர் சிலை அல்லது அம்மன் சிலையை போல் தெரிந்த அதின் தலை பகுதியில் நன்கு வேலைப்பாடுகளுடன் கூடிய அளவில் வட்டமாக இருந்தது. இரண்டு அடுக்கு வேலைப்பாடுகளுடன் குடுமி போல் இல்லாமல் வட்ட வடிவமாக இருந்தது.

காதுகளில் நல்ல வட்டவடிவில் கம்மலை போன்ற அமைப்பு இருந்தது.மணலில் நீண்ட காலம் இருந்ததால் செம்மண் படிந்து காணப்பட்டது. அத்துடன் பழங்கால உடைந்த ஓடுகளின் துண்டுகளும் கிடைத்தன. இது குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்து அந்த சிலையை வீகேபுதூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை தொல்லியல் துறை வசம் ஓப்படைக்கப்பட்டு ஆராய்ச்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image