கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடல் கவனிப்பாரற்று சாலையில் கிடந்த அவலம்-வைரல் வீடியோ…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதிலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வந்தாலும், நோய் தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பலர் சிகிச்சை பலனின்றியும் சிலர் சிகிச்சையே கிடைக்காமலும் உயிரிழக்கும் பரிதாபங்களும் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பெங்களூருவில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடல் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடுரோட்டிலேயே மழையில் நனைந்தபடி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் ஹனுமந்தா நகரில் உள்ள 63 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களாகவே கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளனர். மாலை 4 மணிக்கே ஆம்புலன்ஸ் வரும் எனக் கூறப்பட்டுள்ளது. வீட்டுக்கு அருகில் ஆம்புலன்ஸ் வந்தால் அக்கம் பக்கத்தினர் அச்சமடையக்கூடும் என்பதால் தெரு முனைக்கு முதியவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது முதியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சாலையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.

அதன் பின்னர் மூன்று மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை எடுத்துச் சென்றுள்ளது. 3 மணி நேரமாக கொட்டும் மழையில் சாலையிலேயே முதியவரின் உடல் கண்டுகொள்ளப்படாமல் கிடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தித்தொகுப்பு
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image