Home செய்திகள்உலக செய்திகள் மனித மூளையில் எவ்வளவு தகவல்களைப் பதிவு செய்ய முடியும்?

உங்கள் கணினியில் இருக்கும் வன்தட்டு நிலை நினைவகத்தில், அதாவது Hard Discல் எத்தனை TeraByte பதிவு செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 500 gigabyte? 1 TB? 2 TB அல்லது 4 TB? தற்போது தனிப்பட்ட பாவனைக்கு என்று அமைக்கப்பட்ட கணினிகளில் பொதுவாக 1-4 TB தான் இருக்கும். சரி, உங்கள் கணினி பற்றி இப்படி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே, ஆனால் உண்மை சொல்லப் போனால் உங்கள் மூளையும் ஒரு விதமான Hard Disc தானே? அதில், நமது சிறு வயதில் இருந்து இன்று வரை எவ்வளவோ விஷயங்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். எனவே, மூளை எனும் இந்த hard discல் எவ்வளவு பதிவு செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை என்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.

மனித மூளையில் எவ்வளவு தகவல்களைப் பதிவு செய்ய முடியும்? இதைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள், ஆனால் ஒருவராலும் இதற்கு நிச்சயமாகப் பதில் கூற முடியவில்லை. எனவே நானும் கூட இன்று உங்களுக்கு இதைக் கற்பனைப் பண்ணி பார்ப்பதற்காக ஒரு விளக்கத்தைத் தருகிறேன். சரி, முதலில் கணினியில் தகவல்கள் எப்படிப்பதிவு செய்யப் படுகின்றது என்பதைப் பார்ப்போம். இது மிகவும் இலகுவான ஒரு விஷயம் தான். கணினிக்கு இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் தான் தெரியும். ஒன்று அல்லது பூச்சியம், அதாவது one or zero, yes or no, on or off. இதைத் தவிர்த்து வேறு ஒன்றுமே கணினிக்குத் தெரியாது. இப்படிப் பதிவு செய்யப் படும் ஒரு ஒன்று, அல்லது பூச்சியத்தை 1 இருமம் தகவல் (1 bit information) என்று அழைப்பார்கள். நாம் கணினியில் பதிவு செய்யும் ஒவ்வொரு விஷயமும் தொடர்ச்சியான பூச்சியம் மற்றும் ஒன்றால் பதிவு செய்யப் படுகின்றது.

சரி இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி நமது மூளையை சற்று உத்துப் பார்ப்போம். நமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு இது. நமது நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் நடவடிக்கை என எல்லாவற்றையும் முறைப்படுத்துகிறது மூளை. நமது மூளையின் மொத்த எடையில் 60 சதவீதம் கொழுப்பால் ஆனது. மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும், உந்தும்போதும் வலியை உணராது. நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில்அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்கநிலையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போதுதான் டாக்டர்களால் அறியமுடியும்.

25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது மூளை. அதாவது ஒரு மின்விளக்கை எரியவைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும். எந்த ஒரு விஷயத்தையும் சரியாக பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாகத்தான் பதிவுசெய்கின்றன. ஆனால், மூளைதான் அதை சீராக்கி நமக்கு உதவுகிறது. மூளை பெரிதாக இருந்தால் அறிவும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை. மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் என்கிறார்கள். இந்த நரம்பு இழைகள் உந்துவிசைகளை நமது உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவுகின்றன. 20 வயதுகளை அடையும்போது உடலின் பெரும்பகுதியான உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. ஆனால் மூளை வித்தியாசமானது. நமது 40 வயதாகும்வரை மூளையின் வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் நமது மூளை அதை எப்போதும் ஏற்றுக் கொள்ளும்.

நாம் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களை சிந்திக்கிறோம். நீங்கள் வேகமாக சிந்திப்பதாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியும். ஒரு தகவல் நமது மூளைக்குள் மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நமது மூளை எப்போதும் ஒய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும். நமது மூளையின் உருவம் வளராது. நாம் பிறக்கும்போது என்ன அளவில் இருந்ததோ அதே அளவில்தான் எப்போதும் இருக்கும். குழந்தை பிறக்கும்போது பார்த்தால் அதன் உடலைக் காட்டிலும் தலை பெரிதாக இருப்பதை காண முடியும்.

மனித மூளை சுமார் 100 பில்லியன் நியூரான்களைக் கொண்டிருக்கிறது. இந்த நியூரான்கள் ஒவ்வொன்றும் சுமார் 1,000 நரம்பிணைப்புகளுடன், அதாவது Synapses உடன் இணையமுடியும் என்று எடுத்துக்கொள்வோம். அது மட்டும் இல்லை, இந்த ஒவ்வொரு நரம்பிணைப்பிலும் 1 Bit information அதாவது ஒரு ஒன்று அல்லது ஒரு பூச்சியத்தைப் பதிவு செய்ய முடியும் என்றும் எடுத்துக்கொண்டால், நமது மூளையில் எவ்வளவு பதிவு செய்ய முடியும் தெரியுமா? 1 கோடி கோடி பிட்ஸ், அதாவது 100 Tera Byte பதிவு பண்ண முடியும். ஆனால், இது ஒரு குறைந்தபட்சமான எண்ணிக்கை தான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இவர்களின் கணிப்புப் படி சுமார் 2.5 Peta Byte அதாவது 2500 Tera Byte வரை பதிவு செய்ய முடியும் என்று கூட சொல்கிறார்கள். ஆச்சரியமாக இல்லையா?

பிறப்பில் இருந்து பார்த்தது கேட்டது எல்லாமே நம் மூளைக்குள்ளே இன்னும் பதிந்து இருக்கிறது. ஆனால், மூளையில் எந்த இடத்தில் பதிவு செய்து இருக்கிறது என்பது தான் தெரிவதில்லை. இப்படித் தெரியாமல் போவதைத் தான் நாம் மறதி என்று அழைக்கின்றோம். சரி, 2500 TB என்றால் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? 2500 TBல் 30 லட்சம் மணி நேரம், அதாவது 342 வருடங்கள் தொடர்ந்து பார்க்கக்கூடிய சின்னத்திரை நாடகங்களைப் பதிவு செய்ய முடியும். இதே 2500 TBல் 4.2 கோடி மணி நேரம் அதாவது 4,800 வருடங்கள் தொடர்ந்து கேட்கக்கூடியதாகப் பாடல்களைப் பதிவு செய்ய முடியும். நம்பவே முடியவில்லை அல்லவா?

இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையானது ஆய்வுகளுக்கும் ஐயங்களுக்கும் உரிய ஒரு பொருளாக இருந்து வருகின்றது. இவரது மூளையானது இவர் இறந்து ஏழு மணி நேரங்களுக்குப் பின்னர் அகற்றப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அதிகமான அறிவே இவ்வாய்வுகளுக்குக் காரணமாகும்.

ஐன்ஸ்டீனின் மூளையில் எண், வெளி சார்ந்த செயலாக்க மூளையின் பகுதிகள் பெரிதாக இருக்க, பேச்சு, மொழி சார்ந்த பகுதிகள் சிறியதாக இருந்தன என அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்தன. ஏனைய ஆய்வுகள் ஐன்ஸ்டீனின் மூளையின் நரம்புப் பசைக் கல எண்ணிக்கை அதிகரித்திருந்தது எனத் தெரிவித்தன. ஐன்ஸ்டீன் தனது மூளையில் 100 சதவிகிதத்தை பயன்படுத்தினாரா? ஐன்ஸ்டீன் ‘ஐ க்யூ’ 160, பொதுவாக, 120 முதல் 129 வரை இருப்பது அதிகபட்ச திறனாகக் கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ராமானுஜம் போன்ற அறிஞர் பெருமக்கள் கூட தங்களின் மூளையை வெறும் 17 முதல் 23 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான மனிதர்கள் மூளையின் திறனில் 10 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, 100 சதவிகிதத்தை அணுக முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்?

இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே, நமது மூளை ஒரு அதிசயம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை, அல்லவா? இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? கம்ப்யூட்டரில் செய்வது போல மூளைக்கு நேரடியாக பதிவேற்றமும், பதிவிறக்கமும் செய்ய முடிந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? இதற்குரிய பதிலையும், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்! தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!