Home செய்திகள் இராமநாதபுரம், பரமக்குடியில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். அரசு முதன்மைச் செயலர் ஆய்வு

இராமநாதபுரம், பரமக்குடியில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். அரசு முதன்மைச் செயலர் ஆய்வு

by mohan

இராமநாதபுரம், பரமக்குடிபகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,அரசு முதன்மைச் செயலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பரமக்குடி அரசு மருத்துவமனை, பரமக்குடியில் கொரானா தொற்று கட்டுப்பாட்டு பகுதியான சின்னக்கடை தெரு, கொரானா தொற்று பராமரிப்பு மையமான பரமக்குடி அழகப்பா கலை அறிவியல் கல்லூரி, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்., ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 11,434 பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 839 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 235 பேர் பூரண குணமாகி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 594 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 300 முதல் 350 பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க சுகாதார மையம், கொரானா வைரஸ் தொற்று பராமரிப்பு மையம் மூலம் 900 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. சுகாதாரத்துறை வழிகாட்டல் படி கூடுதலாக 1559 படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள், 59 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 525 டாக்டர்கள், 900 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவ நலப்பணிகளில் இவர்களுக்கு உறுதுணையாக 2,300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆறு அவசர கால ஊர்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப பணியாளர்கள் மற்றும் அவசர கால ஊர்தி எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் யோகா, உடற்பயிற்சிகளை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோயாளிகள், டாக்டர்களுக்கு தேவையான உணவு, பழங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தரமான முறையில் வழங்குவதை உறுதி செய்ய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிக்க சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக களப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரானா தொற்று பரவலை தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கிய பணிகளை தொய்வுமின்றி விழிப்புடன் மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ஏ.சகாய ஸ்டீபன்ராஜ், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேல், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் எம்.அல்லி, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் சி.அஜித்பிரபு குமார் (ராமநாதபுரம்), பி.இந்திரா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!