போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சாத்தான்குளம் வணிகர்கள் குடும்பத்தினருக்கு எம்பி., எம்எல்ஏ., ஆறுதல்

சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினரை நவாஸ்கனி எம்பி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு நீதி கிடைக்க துணை நிற்போம் என உறுதியளித்தார்.இது குறித்து நவாஸ் கனி எம்பி கூறும்போது,தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் மரணம், அவர்களின் குடும்பத்தினரின் வேதனை மிகு வார்த்தைகள் நெஞ்சைப் பதறச் செய்கிறது.

அவர்களுக்கு ஆறுதல் கூறும் வண்ணம் நேற்று (29/06/2020) நானும் (நவாஸ்கனி எம்பி) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமானகே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் அவர்களும் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.காவல் விசாரணையில் அவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.இதற்கான உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த கொடும் செயலில் ஈடுபட்டவர்கள் எவராயினும் அவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு இவ்வழக்கில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டோம். அவர்களுக்கான உரிய நீதி வழங்கப்படவேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவது, நிதி உதவி வழங்குவது மட்டும் போதாது அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.இந்நிலைக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இது போன்ற இன்னொரு சம்பவம் நடக்காது தடுக்க, கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நீதி கிடைக்க துணை நிற்போம் என உறுதியளித்து ஆறுதல் கூறினோம்.

இச்சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்,ஏ,இப்ராஹிம் மக்கி, மாவட்டத் தலைவர் பி.மீராசா மரைக்காயர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஹாபிழ் எஸ்.கே.சாலிஹ், நெல்லை மண்டல முஸ்லிம் யூத் லீக் அமைப்பாளர் கடாபி, சாத்தான்குளம் நகர் தலைவர் மீராசாஹாஜியார், காயல்பட்டினம் நகர தலைவர் எம்.ஏ ஹசன், காதர் சாகிப் உள்ளிட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..