Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வீ.கே.புதூரில் போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்ததாக கூறி பொது மக்கள் சாலை மறியல்;போலீஸ் குவிப்பு..

வீ.கே.புதூரில் போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்ததாக கூறி பொது மக்கள் சாலை மறியல்;போலீஸ் குவிப்பு..

by ஆசிரியர்

சுரண்டை அருகே போலீஸ் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் உயிரிழந்ததாக கூறி இரண்டாவது நாளாக பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீ.கே.புதூர் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் என்பவர் மகன் குமரேசன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து இவர் கடந்த மே 10 ம்தேதி வழக்கு விசாரணைக்கு வீ.கே.புதூர் காவல் நிலையம் வந்த போது எஸ்ஐ சந்திரசேகர் மற்றும் ஏட்டு குமார் ஆகியோர் தாக்கியதாகவும், அதனால் உடல் பலவீனமாகி அவர் சுரண்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 12-ம் தேதி இரவு மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்களும், உறவினர்களும் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் டிஎஸ்பி ஜாஹீர் ஹீசைன், தென்காசி டிஎஸ்பி கோகுல் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையில் 150 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காலை 4 மணிக்கு மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை உயிரிழந்த குமரேசன் உடல் பிரேத பரிசோதனையை டாக்டர்கள் குழுவினர் செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ‌ பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு வீகேபுதூர் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே குமரேசனின் தந்தை நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ சந்திரசேகர், ஏட்டு குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வீகே புதூர் பகுதியில் காலை முதலே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சில டீக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. தொடர்ந்து தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தென்காசி எஸ்பி சுகுணாசிங் வீ.கே.புதூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினார். இந்நிலையில் இறந்த குமரேசன் உடல் வீகேபுதூர் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஆண்களும் பெண்களும் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களுடன் எஸ்பி சுகுணா சிங், மற்றும் டிஎஸ்பிக்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் வந்த குமரேசன் உடலுக்கு பொதுமக்களும் உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!