Home செய்திகள்உலக செய்திகள் கொரோனா… ஊரடங்கு… பசி… வெளிநாட்டு வாழ்க்கை…

கொரோனா… ஊரடங்கு… பசி… வெளிநாட்டு வாழ்க்கை…

by ஆசிரியர்

பசியோடு வந்தவர் பேரம் பேசினார், விலை படியவில்லை. அவரிடம் போதிய பணமும் இல்லை!

ஆனாலும் பசி போக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு, செய்து வைத்த உணவை விற்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று காமெடி நடிகர் வடிவேலு தேங்காய் விற்பனை செய்வதைப் போன்று நான் உணவு விற்பனை செய்தேன்.

7 ரியாலுக்கு விற்கும் வெஜிடேரியன் சாப்பாட்டை 5 ரியாலுக்கு வேண்டுமென்றார். அவரிடம் இருந்தது 5 ரியால் தானாம். நானும் அவரது சூழ்நிலையை புரிந்து சம்மதித்து அவருக்கு சாப்பாடு பரிமாறினேன். சாப்பிட்டுக்கொண்டே அவரைப்பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

சாப்பிடும் போது பேசாதீர்” என்று கூறும் நிலையில் அவர் இல்லை, காரணம் அவரது சோக கதையை என்னிடம் சொல்லி அவரது மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துக் கொண்டிருக்கும் போது அதை தடுக்க எனக்கு மனமில்லை. தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே இருந்தார்.

முடிவில் கொரோனா பாதிப்பால் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த கம்பெனி இழுத்து மூடப்படும் நிலையில் இருப்பதால் அவருக்கு வேலை போய்விட்டதாக கூறி முடித்தார். கையில் பண புழக்கமும் இல்லை என்று சொல்லி தினமும் பகல் மட்டுமே சாப்பிடுவதாகவும் காலை மாலை டீ மட்டும் குடிப்பதாகவும் கூறிமுடித்தார் சவூதியில் பிழைக்க வந்த வெளிநாட்டு தொழிலாளி.

சாப்பிட்டு முடித்ததும் ஒரு வடை கொடுத்து இதற்கு காசு வேண்டாம் என்றேன். அவரும் சந்தோசமாக வடையை சாப்பிட்டு விட்டு கடைசியாக ஒருவித தயக்கத்துடன் என்னை ஏறிட்டு பார்த்தார். என்னவென்று கேட்டேன்? ஒரு டீ மட்டும் இலவசமா கிடைக்குமா என்றார்?

நானும் டீயை கொடுத்து விட்டு சாப்பாட்டுக்காக அவர் தந்த 5 ரியாலை வாங்கி கல்லாவில் போட்டு விட்டு அவர் போன பிறகு, நாம் அவரிடம் அந்த 5 ரியாலையும் வாங்காமல் திருப்பி கொடுத்திருக்கலாமோனு? யோசித்தேன்.

இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவருக்கு இலவசமா சாப்பாடு கொடுத்திருந்தால் கடை உரிமையாளர்களான எனது நண்பர்கள் மகிழ்ச்சிதான் அடைந்திருப்பார்கள் என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் என்னை நம்பி அமானிதமாக ஒப்படைத்திருக்கும் போது அதன் நேர்மைக்கு களங்கமில்லாமல் நாம் நடந்து கொள்ளவேண்டுமென்பதே எனக்குள் இருந்த சிந்தனை.

அதனால் தான் லாபம் இல்லாமல் முதலுக்கான பணத்தை மட்டும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் எனக்கு.

பல்வேறு கனவுகளுடன் தாயகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வரும் தொழிலாளர்களின் இன்றைய நிலை பசியும் பட்டினியும் தான் என்பதை நினைக்கும் போது என்னை அறியாமலேயே கண்கள் கண்ணீர் வடிக்கிறது.

ஒருசிலருக்கு வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கபுரியாக அமையலாம்? பெரும்பாலானோருக்கு நரக வாழ்வைப் போன்ற நெருக்கடி நிலையில்தான் வாழ்க்கை கழிகிறது. காலமெல்லாம் உழைத்து தம் குடும்பத்தினரின் சுகபோக வாழ்வுக்கு பணம் அனுப்பியவரின் நிலையை தான் இன்று நான் சந்தித்த போது உணரமுடிந்தது.

தயவுசெய்து கையில் இருக்கும் பணத்தையோ? நகைகளையோ? வீண் விரையம் செய்து விடாதீர்கள், ஆடம்பர வாழ்வை கைவிட்டு விட்டு இருப்பதை சேமித்து வையுங்கள். உங்களுக்காக தங்களின் இளமையையும் வாழ்வின் பெரும்பகுதியையும் தொலைத்துவிட்டு வேலையை இழந்த துக்கத்தில் ஊர் வரும்போது பட்டினி இல்லாமல் அவர்களுக்கு வயிறார சோறு போடுங்கள். -கீழை ஜஹாங்கீர் அரூஸி…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!