கொந்தகையில் மண்டை ஓட்டுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம்!

கொந்தகையில் மண்டை ஓட்டுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு, தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம்!

கொந்தகையில் தனியார் நிலத்தில் முதுமக்கள் தாழி மண்டை ஓட்டுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியது.

ஊரடங்கால் நிறுத்தப்பட்ட அகழாய்வு மே 20ல் அகரம், கீழடியில் தொடங்கப்பட்டு பணிகள் நடந்தன. மணலுரில் மே 22ம் தேதியம் கொந்தகையில் 27ம் தேதியும் அகழாய்வு பணிகள் தொடங்கின.

கொந்தகையில் நடந்த அகழாய்வில் நான்கு முதுமக்கள் தாழிகளும், ஆறு சிறிய மண்பானைகளும் கண்டறியப்பட்டது.

கொந்தகை அகழாய்வில் மதுரை காமராசர் பல்கலை கழக உயிரியல் துறையும் இணைந்து மேற்கொண்டது. கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்க கூடும், எனவே கொந்தகையில் குறைந்த பட்சம் 15 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் அலுவலர்கள் தெரிவித்து வந்தனர்.

சுரேஷ் என்பவரது நிலத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வரும் வேளையில் இவரது சகோதரர் கதிரேசன் என்பவரது நிலத்தில் தென்னங்கன்றுகள் வைக்க இயந்திரம் மூலம் குழிகள் தோண்டும் பணி நடந்தது.

இதில் ஒரு இடத்தில் முதுமக்கள் தாழி முழு அளவில் கண்டறியப்பட்டது இதுகுறித்து நில உரிமையாளர் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் அலுவலர்கள் பாஸ்கரன், ரமேஷ், ஓய்வு பெற்ற தொல்லியல் அலுவலர் சேரன், ஓய்வு பெற்ற மதுரை காமராசர் பல்கலை கழக உயிரியல் துறை பேராசிரியர் பிச்சப்பன் தலைமையிலான குழுவினர் முதுமக்கள் தாழியை ஆய்வு செய்து தாழியினுள் இருந்த மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வெளியில் எடுத்தனர். பண்டைய காலத்தில் முதியோர்களை பராமரிக்க முடியாவிட்டால் பெரிய அளவிலான பானையினுள் அவர்களை வைத்து உணவு, தண்ணீருடன் மண்ணிற்குள் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

தற்போது உணவு குவளை, தண்ணீர் பாத்திரம், உள்ளிட்டவற்றுடன் மண்டை ஓடு, எலும்புகள் கண்டறியப்பட்டது. இதற்கு ஆதாரமாக கருதப்படுகிறது. முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த பின்தான் இவற்றின் காலம் பற்றி அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கொந்தகை அகழாய்வு பரப்பளவை மேலும் கூடுதல் பணியாளர்களுடன் மேற்கொண்டால் பண்டைய தமிழர்கள் பற்றிய மேலும் பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புண்டு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..