கத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..

கத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய் பயிரிட்டுள்ளனர்.

கத்தரிக்காய் விளைச்சல் தற்போது அதிகரித்துள்ள நிலையில், போதியப் போக்குவரத்து இல்லாததால் ஏற்றுமதி பாதிப்படைந்து, கத்தரிக்காயின் விலை வீழ்ச்சியடைந்து, அறுவடை செய்வதற்கான கூலி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

5 மாதப் பயிரான உஜாலா கத்தரிக்காய், தற்போது நடவு முடித்து 45 நாட்களுக்குப் பிறகு விளைச்சல் அதிகரித்து, ஒரு நாளைக்கு 400 கிலோ வீதம் விவசாயிகள் பறிக்கும் நிலை உள்ளது. அவ்வாறு பறிக்கப்படும் கத்தரிக்காய்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது சென்னைக்குப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊரிலேயே காய்களை விற்பனை செய்துள்ளனர்.

செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிட்ட கத்தரிக்காய்களை அறுவடை செய்து, இருசக்கர வாகனத்தில் ஒரு நாளைக்கு 50 கிலோ வீதம், பத்து ரூபாய் கிலோ என்ற விலையில் விற்பனை செய்து வந்ததால், மீதமுள்ள 350 கிலோவுக்கு மேல் செடியிலேயே காய்கள் வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை.

பறிக்கும் கூலிக்கே விலை இல்லாத நிலையில், ஏற்றுமதி செய்யவும் வழி இல்லாமல், விற்பனை செய்வதற்கும் வாய்ப்பில்லாமல், தன்னுடைய நிலத்தில் வேறு பயிருக்கு கத்தரிக்காய் செடி மற்றும் காய்களை இயற்கை எருவாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு ஏக்கர் பயிரிட சுமார் ரூ. 50 ஆயிரம் வரை செலவானதாகவும், ஊரடங்கால் ரூ.50,000 வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image