தனது வாழ்வினை தியாகம் செய்து பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள்- உலக பெற்றோர் தினம் இன்று (ஜூன் 1).

உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் அன்னையர் தினமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் தினம் தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் இரண்டையும் சேர்த்து தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி ஜூன் 1 ம் தேதியை உலக பெற்றோர் தினம் என ஐக்கிய நாடுகள் சபையினர் அறிவித்தனர். இதுவும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.

முந்தைய காலங்களை விட பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள் அதீத அக்கறை காட்டுகிறார்கள் என்பதனை கண்கூடாக பார்க்க முடிகிறது. மாலை வேளைகளில் இசை வகுப்பு, விளையாட்டு வகுப்பு, நீச்சல் பயிற்சி வகுப்பு என அடுத்த வேலையை துவங்கி விடுவார்கள். அந்த பெற்றோரின் முழு முயற்சியும் எதற்காகவெனில் போட்டி நிறைந்த இவ்வுலகில் நமது பிள்ளை எதையாவது சாதித்துவிட வேண்டும். அவன் நிம்மதியாக வாழுவதற்கு தேவையான ஒரு வேலையை பெற்றுவிடவேண்டும் என்பதற்காகத்தான். ஒரு ஆய்வு கூறுகிறது, நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளையின் படிப்பிற்க்காக மட்டும் 50% முதல் 60% சதவிகிதம் வரைக்கும் செலவு செய்கிறார்கள் என்று. இன்னும் சில குடும்பங்களில் கடன் வாங்கிக்கூட பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கவும் நினைக்கிறார்கள்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை என்பது உண்டு. ஆனால் பெற்றோர்கள் மட்டுமே தான் தங்களுக்கென்று வாழ்க்கையொன்று நினைப்பதாக உணருவதே இல்லை. தங்களது வாழ்க்கை என்பது தனது பிள்ளை தான் என பெற்றோர்கள் முடிவெடுத்து விட்டார்கள். உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி தனது வாழ்வினை தியாகம் செய்து பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்திடும் நன்றிக்கடன் என்ன தெரியுமா? உங்களது பெற்றோரை பெருமை அடையச்செய்வது தான். அவர்களுக்கென்று வாழ்க்கை இருக்கும் போது உங்களுக்காக அதனை தியாகம் செய்தவர்கள் என்பதனை நினைவில் கொண்டாலே நீங்கள் அவர்களுக்கு நன்றியோடு தான் இருப்பீர்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் “உலக பெற்றோர் தின” வாழ்த்துக்கள்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..