அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதா.?-மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி கண்டனம்!

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதா.?-மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி கண்டனம்!

கொரானா நோய் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கை காரணம் காட்டி தொழிலாளர்களின் வேலையை பறிக்கவோ, ஊதியத்தை குறைக்கவோ கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் சுமார் 1லட்சத்து 30ஆயிரம் ஊழியர்களுக்கும் மார்ச், ஏப்ரல் மாதம் முழுமையான ஊதியம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மே மாத ஊதியத்தை பிடித்தம் செய்வதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் ஊழியர் கடந்த ஏப்ரல்-2019 முதல் பிப்ரவரி 2020வரை 11மாதங்களில் பணிக்கு வந்த மொத்த வருகையை கணக்கில் எடுத்து அதன் சராசரி அடிப்படையில் கணக்கிட்டு மே மாத சம்பளம் வழங்கப்படும் என உத்தரவிட்டிருப்பது மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிராக அமைந்துள்ளதோடு தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகவும் இருக்கின்றது.

எனவே கொரானா பேரிடர் ஊரடங்கை காரணம் காட்டி ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அரசின் உத்தரவையும் மீறி அரசு போக்குவரத்துக் கழகம் தன்னிச்சையாக செயல்பட்டு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வதையும், ஊழியர்களின் விடுப்புகளை அவர்களின் அனுமதியின்றி ஈடுசெய்வதையும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மே மாத சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும், ஊழியர்களின் அனுமதியின்றி ஈடுசெய்யப்பட்ட விடுப்புகளை ரத்து செய்து அவர்களின் சம்பளக் கணக்கில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

சு.ஆ.பொன்னுசாமி (மாநில செயலாளர்) மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..