கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தலைமை செவிலியர் மற்றும் ஒப்பந்தப்பணி மருத்துவர் மரணம்: ரூ.50 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்:-எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தலைமை செவிலியர் மற்றும் ஒப்பந்தப்பணி மருத்துவர் மரணம்: ரூ.50 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்:-எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிவந்த தலைமை செவிலியர் திருமதி ஜான் மேரி பிரிசில்லா அவர்கள் உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெறவேண்டிய சூழலில் கொரோனா தடுப்பு பணிக்காக பணி நீட்டிப்புடன் கொரோனா வார்டில் பணி செய்து வந்த நிலையில்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக அவர் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அவர் கொரோனாவால் மரணமடையவில்லை என்று மருத்துவமனையின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அவரது சிகிச்சை குறிப்பேட்டில் கொரோனா தொற்று என குறிப்பிடப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், சென்னையில் கொரோனா பெருந்தொற்று பகுதியில் பணியாற்ற, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட யுனானி மருத்துவர் திரு அப்ரோஸ் பாஷா என்பவரும் சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் கொரோனோ சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டார். மருத்துவர் அப்ரோஸ் பாஷா கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மரணம் கொரோனா தொற்றால் நிகழவில்லை என மருத்துவமனை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவத் துறை சார்ந்த இந்த இருவரின் மரணங்களும் கொரோனா தொற்றால் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியான நிலையில், பின்னர் அதனை மறுத்து வெளியான அறிக்கைகள் மீது சந்தேகம் எழுகின்றது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் காப்பீட்டை இவர்களுக்கு மறுப்பதற்கான நடவடிக்கையாக இந்த மறுப்பு அறிவிப்புகள் இருக்குமோ என்று பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்புவதில் நியாயம் இருப்பதாக தெரிகிறது.

ஆகவே, கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்ததை போன்று, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மரணமடைந்த தலைமை செவிலியர் ஜான் மேலி பிரிசில்லா மற்றும் மருத்துவர் அப்ரோஸ் பாஷா ஆகியோருக்கும் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம்
ஒருங்கிணைப்பாளர்
ஊடகம்& மக்கள் தொடர்பு
SDPI கட்சி

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered