Home செய்திகள்உலக செய்திகள் பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள் இன்று (மே 28, 1969).

பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள் இன்று (மே 28, 1969).

by mohan

சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் (Sivaramakrishnan Pancharatnam) பிப்ரவரி 9, 1934ல் கல்கத்தாவில் பிறந்தார். இவரது 25ஆவது அகவையில் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளராக சேர்ந்தார். 1961 முதல் 1964 வரை மைசூர் பல்கலைக்கழகம் இயற்பியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரின் ஆய்வுகள் சி. வி. இராமனின் மேற்பார்வையில் பெரும்பாலும் நடைபெற்றன. இராமன் பஞ்சரத்தினத்தின் திறமையினை மிக நன்றாக உணர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு முறை ஜவகர்லால் நேரு இராமனைச் சந்திக்க இராமன் ஆய்வகத்திற்கு வந்த போது நேருவிடம் அந்த இளைஞன் இந்தியாவிற்கு நோபல் பரிசு பெற்றுத் தருவான் எனக் கூறினாராம்.

பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை, 1955ம் ஆண்டு கண்டறிந்தார். ஆயினும் அவர்தம் ஆய்வுகள் 1984ம் ஆண்டு வரை உலகளாவிய அளவில் பெரிதும் அறியப்படாது இருந்தது. 1984ம் ஆண்டு மைக்கேல் பெரி என்பார், இதே போன்ற ஒரு வடிவியற்கட்டத்தை குவாண்ட இயங்கியலில் கண்டறிந்து, ராயல் சொசைட்டி எனப்படும் வேந்தியக் குழும பனுவலில் வெளியிட்டிருந்ததன் பின், இந்திய இயற்பியலாளர்களான சி.இராமசேஷன், இராசாராம் நித்தியானந்தா, சைமன், முகுந்தா, ஜோசப் சாமுவேல், இராஜேந்திர பண்டாரி போன்றோர் ஒளியியலில் பஞ்சரத்தினம் அவர்கள் தந்த ஆய்வுகளை உலகம் அறியச் செய்ததோடு அவர்களும் வடிவியற்கட்டத்தில் பெரிய ஆய்வுகளைச் செய்தனர். அவை குவாண்டவியலிலும், அடிப்படை இயற்பியல் கட்டமைப்பிலும், கணிதத்திலும் முக்கியமானப் பொருளாக ஆய்வு செய்யப்படுகிறது.

குவாண்டக்கணினியியலில் மிக முக்கியமான அம்சமாக, தவறிலாக் கணித்தலிலும், செய்திப் பரிமாற்றத்திலும் ஊகிக்கப்படுகிறது. மேலும் அறியப்பட்ட ஆய்வாளர்களான அகரனோவ், ஜீவா ஆனந்தன், அருண் குமார் பதி, வேத்ரால், ஸ்யோக்விஸ்ட் போன்றோர் இத்துறையில் மிகவும் முக்கியமானப் பங்களிப்பினைத் தந்துள்ளனர். பஞ்சரத்தினம் வடிவியற்கட்டம் எனப்படும் வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்கள் குறுக்கிட்டுவிளைவு ஏற்பட்டு வெளிவரும் ஒளிக்கதிரில், தளவிளைவு வடிவியலைச் சார்ந்து ஒரு கட்ட வேறுபாடு உள்ளதைக் கண்டறிந்தார். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும், படிக ஒளியியற் துறையைச் சார்ந்தது.

பஞ்சரத்தினம் புகழ்பெற்ற இயற்பியலர்களான, இராமன் விளைவுக்காக நோபல் பரிசு பெற்ற சர். சி.வி. இராமன் மற்றும் சந்திரசேகரின் விண்மீன் ஆயுள்வரையறைக்கான நோபல் பரிசு பெற்ற சு. சந்திரசேகர், நீர்மபடிகவியல் மற்றும் படிக ஒளியியல் ஆய்வுகளுக்காக அறியப்பட்ட சி. சந்திரசேகர், சி. இராமசேஷன் அவர்களின் உறவினர் ஆவார். பஞ்சரத்தினம் தமது ஆய்வுப் பணிகளைத் தவிர்த்து, ஆசிரியப் பணியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டிருந்தார். தமது சமூகப் பணிகளின் போது, ஏற்பட்ட கிருமித் தொற்றால், அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இராமன் ஆய்வகத்தைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்த போது, உடல்நலக் குறைவால் மே 28, 1969ல் தனது 35வது அகவையில் ஆக்சுபோர்டு, இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!