இராமநாதபுரம் பள்ளிக்கல்வி துறை மூலம் அரசு பொதுத்தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தம் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (23.5.2020) நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:மாவட்டத்தில், கொரானா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கும் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 27.5.2020 அன்று துவங்கவுள்ளது. மாவட்டத்தில் 4 விடைத்தாள் திருத்தும் மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 960 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழக அரசு வரையறுத்துள்ளபடி, 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும். கொரானா வைரஸ் தொற்று நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு மாற்றாக மாணாக்காகள் சிரமப்படாத வகையில் அருகிலேயே வேறு தேர்வு மையம் அமைக்கப்படும். 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு 15.6.2020 அன்று துவங்கி 25.6.2020 வரையில் 295 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.மாவட்டத்தில் மொத்தம் 16,653 பள்ளி மாணவர்களும், 392 தனித்தேர்வர்களும் என 17,045 மாணாக்கர்கள் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். 11-ம் வகுப்பிற்கான விடுபட்ட தேர்வு 16.6.2020 அன்று 190 தேர்வு மையங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 14,608 பள்ளி மாணவர்களும், 181 தனித்தேர்வர்களும் என 14,789 மாணாக்கர்கள் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.

அதேபோல, 12-ம் வகுப்பு இறுதித்தேர்விற்கு வருகை தராத 724 மாணாக்கர்களுக்கு 18.6.2020 அன்று மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு மையங்கள் மற்றும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் காலை, மாலை என 2 வேளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிருமி நாசினி தெளித்திட வேண்டும். தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் போதிய சமூக இடைவெளி கடைபிடித்திட ஏதுவாக ஒவ்வொரு தேர்வு அறையிலும் தலா 10 மாணாக்கர்கள் மட்டுமே அனுமதித்து, ஒவ்வொரு இருக்கையும் குறைந்தபட்சம் 1.5 மீ இடைவெளியில் அடையாளமிட்டு இருக்கைகள் அமைத்திட வேண்டும். அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சார வசதி, போதிய குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு தேவையான முகக்கவசம்வழங்கிடவும், தங்களது கைகளை சுத்தமாக கழுவி பராமரித்திட ஏதுவாக உரிய வசதிகள் ஏற்படுத்திட வேண்டும்.

வெளி மற்றும் உள்ள மாவட்டங்களிலிருந்து பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கும், தேர்வு எழுத வரும்மாணாக்கர்களுக்கும் போதிய போக்குவரத்து வசதி ஏற்படுத்திட வேண்டும். அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக பொதுசுகாதாரத் துறை அலுவலர்கள், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் தயார்நிலையில் இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, இராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தி, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஏ.தங்கவேலு, மாவட்ட கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி, சோ.கருணாநிதி, பாலதண்டாயுதபாணி, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மரு.சி.அஜித்பிரபுகுமார், மரு.பி.இந்திரா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..