தனி மனித உரிமை மீறப்படுகிறதா??..பாதிக்கப்பட்டவர்களின் தகவல் பொதுவெளியில் பரவும் அவலம்.. அரசு அதிகாரிகள் கவனிப்பார்களா..?.

கீழக்கரையில் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் தொடர்ச்சியாக பேஸ் புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அரசாங்கமும் சுகாதாரத்துறையினரும் தங்கள் துறை சார்ந்த கோப்புகளில் வைத்திருக்க வேண்டிய இந்த தகவல்கள் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இதனால் கீழக்கரை பகுதி பொதுமக்கள் சுகாதாரத் துறையினர் மீது பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து ப்ளாக் & ஒயிட் இயக்குனர் மற்றும் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சட்ட செயல் நிர்வாகி முகம்மது இர்ஃபான் கூறுகையில் ”நம் கீழக்கரை நகரில் ஒவ்வொரு முறையும் கீழக்கரையில் கொரானா பாசிட்டிவ் குறித்த சுகாதாரத் துறையினரின் எக்ஸல் சீட் தகவல்கள் மின்னல் வேகத்தில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இவ்வாறு கொரானா பாதித்தவர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்று வேறு எந்த ஒரு ஊரிலும் கொரானா பாதித்தவர்களின் தனி மனித விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. ஆனால் நம் கீழக்கரை நகரில் மட்டும் முழு தகவல்களோடு, வதந்தீகளும் தீயாக பரப்பப்படுகிறது.

இது குறித்து தற்போது சம்பந்தப்பட்ட சுகாதார துறையினரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினருக்கு மட்டுமே தெரிந்த தகவல்கள் எவ்வாறு சமூக வலைத்தளங்களில் கசிய விடப்படுகிறது? தீய நோக்கில் உள் நோக்கத்துடன் இவ்வளவு வேகமாக பரப்பப்படும் இந்த அவசியமற்ற தகவல்களின் பின்னணியில் யார் யாரெல்லாம் உள்ளனர்? என்பதை சம்பந்தப்பட்ட சுகாதார துறையினர் தான் விளக்கமளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இது குறித்து கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதியிடம் கேட்ட போது, “கீழக்கரையில் கொரானா பாசிட்டிவ் ஆக உள்ளவர்களின் தகவல்கள் எங்களுக்கே காலை 12 மணிக்குத் தான் கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே சமூக வலை தளங்களில் எப்படி வெளியாகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. எங்களுக்கு வரும் கொரானா பாசிட்டிவ் ஆனவர்களின் தகவல்களை நாங்கள் சமூக வலைத்தளங்களிலோ அல்லது தனி நபர்கள் எவருக்குமோ பகிர்வதில்லை. இது போன்று கொரானா பாசிட்டிவ் ஆனவர்கள் குறித்த எக்ஸல் சீட் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது சம்பந்தமாக எங்கள் சுகாதாரத் துறை மேல் மட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் இதே போல் கடந்த மாதம் கீழக்கரையில் கொரானா பாதிக்கப்பட்டவர்கள் என்று சமூக விரோதிகளால் பரப்பப்பட்ட பொய்யான தகவல்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இன்னும் நிலுவையிலேயே உள்ளது ஏன் என்று தெரியவில்லை. இந்நிலையில் கீழக்கரையில் மீண்டும் கொரானா பாதித்தவர்கள் என்கிற பட்டியல் சமூக வலைத்தளங்களில் வலம் வருவது, பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கீழக்கரை காவல் துறையினரும், மாவட்ட சுகாதாரத் துறையினரும், கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினரும் முன் வர வேண்டும் என்பது தான் கீழக்கரை பகுதி பொது மக்கள் அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..